February 1, 2024 தண்டோரா குழு
ஜூபிலன்ட் கோயம்புத்தூர் அறக்கட்டளை நடத்தும் ‘ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச எக்ஸ்போ & உச்சி மாநாடு 2024’ கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று தொடங்கியது. இன்று முதல் 3 நாட்கள் (பிப்ரவரி 1 முதல் 3) இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த ‘சர்வதேச கண்காட்சி மற்றும் தொழில்துறை சார்ந்த அறிவை பகிரும் உச்சி மாநாடு’ என்பது பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் ஒரு தனித்துவம் கொண்ட தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு தமிழக அரசின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு (StartupTN) மற்றும் ஃபேம் தமிழ்நாடு (FaMe TN) ஆகிய நிறுவனங்கள் ஆதரவளித்துள்ளது.
பிப்ரவரி 1ல் நடைபெறும் தொடக்க நிகழ்வில், ஸ்டார்ட் அப் தமிழ்நாட்டின் மிஷன் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு.சிவராஜா ராமநாதன் ‘தி ஸ்டார்ட் அப்ஸ்’ என்ற தலைப்பில் தொடக்க உரையையும், கிஸ் ஃபிளேவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.சுரேஷ் சம்பந்தம் ‘தொழில் முனைவோர்’ என்ற தலைப்பில் பற்றிய உரையையும் வழங்க உள்ளனர்.
இந்த மாநாடு மற்றும் கண்காட்சியில் ஸ்டார்ட் அப் நிலையில் உள்ள நிறுவனங்கள் முதல் சிறு மற்றும் நடுத்தர அளவில் உள்ள தொழில் நிறுவனங்களை (SMBs) சார்ந்தவர்கள் வரை பங்கேற்க முடியும். இதில் பங்கேற்பதன் மூலம், முதலீடு, கூட்டாண்மை, புது வியாபார தொடர்புகள் உருவாக்கிக் கொள்ளுதல் உள்ளிட்ட பல வாய்ப்புகளை பெற்று அவர்களின் வியாபாரத்தை மேம்படுத்திக் கொண்டு வளர்ச்சி அடைய முடியும் .
ஜவுளி, உணவு, கட்டுமானம், பொறியியல் பொருட்கள், எலக்ட்ரானிக், ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பம் என உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலதரப்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், உலகளாவிய சிந்தனையாளர்கள், இறக்குமதியாளர்கள், முதலீட்டாளர்கள்,தொழில்நுட்ப வியலாளர்கள்,ஆராய்ச்சியாளர்கள், 20க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் 22 நாடுகளில் இருந்து 200+ தொழில் முனைவோர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.தமிழகம் மட்டும் அல்லது தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இருந்து மொத்தம் 15,000க்கும் அதிகமான பேர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
இதில் தொழில்துறையினருக்கு அவசியமான தலைப்புகளில் குழு விவாதங்கள், தொழில்நுட்பம் சார்ந்த உரையாடல்கள் மற்றும் நிபுணர் உறை ஆகியவை பற்றி 75 க்கும் அதிகமான அனுபவமிக்க பேச்சாளர்கள் பேசவுள்ளனர்.
கொடிசியா வர்த்தக வளாகத்தின் A அரங்கத்தில் மாநாடும், B மற்றும் சி அரங்கங்களில் கண்காட்சியும், உணவு அரங்கத்தின் அருகே உள்ள சிறு அரங்கில் அரசு திட்டங்கள், அரசு வழங்கும் வணிக ரீதியான உதவிகள் உள்ளடக்கிய 50க்கும் மேற்பட்ட பயிற்சி பட்டறைகள் நடைபெறுகிறது .மேலும், கொடிசியாவில் B மற்றும் C அரங்குகளில் நடைபெறும் எக்ஸ்போவில் மொத்தம் 450 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.