March 5, 2024 தண்டோரா குழு
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 12,650 கிராம பஞ்சாயத்துகளிலும், ஃபைர் பிராட்பேண்டு வசதி ஏற்படுத்தப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் கூறினார்.
சிஐஓ கிளப் (தலைமை தகவல் அதிகாரிகள் கிளப்–Chief Information Officers Klub)ன் 9வது ஆண்டு விழா நிகழ்ச்சி கோயம்புத்தூர் ஓட்டல் லீ மெரிடியனில் சனிக்கிழமை (மார்ச் 2, 2024) நடந்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சிறப்புரைஆற்றினார்.
அவர் உரையில் குறிப்பிட்டதாவது;
மக்கள் தங்கள் குறைகளைத் தீர்க்க அரசு அலுவலகங்களை நாடவேண்டும் என்பது பழைமையான கருத்து ஆகும்.அதற்கு பதிலாக ஆன்லைன் மூலமாக மக்கள் தங்கள் குறைகளை தெரியப்படுத்தி விரைவாக தீர்வு காண வழி செய்யலாம். அப்படி செய்தால்,புதிது புதிதாக தாலுகா, கலெக்டர் அலுவலகங்கள் என கட்டத் தேவையில்லை.
அரசாங்கத்தில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட பணி இடங்களில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்கள்–காலியாக உள்ள இடங்களின் விகிதாசாரம் 60:40 என்று உள்ளது. அப்படி இருந்தும், அரசின் வருவாயில் பெரும்பகுதி சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கொடுப்பதில் செலவிடப்படுகிறது.கல்வி கொள்கை மற்றும் சமூக நீதிக் கொள்கை ஆகியவற்றில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. 85 சதவீதம் மாணவிகள் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடிக்கின்றனர்.
கல்லூரி செல்லும் வயதிலுள்ள இளைஞர்களில் 50 சதவீதம் பேர் உயர்கல்வி படிக்கின்றனர்.வேலை வாய்ப்புகளை தேடி 20–30 வயதுள்ள இளைஞர்கள் பலர் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு சென்று மிகச் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்.
வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக தமிழக அரசு பன்னாட்டு கம்பெனிகளை ஈர்த்துள்ளது.தமிழக அரசு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அரசாட்சியையும், பொருளாதாரத்தையும் உயர்த்த முயற்சி செய்து வருகிறது. கல்வியின் முக்கிய நோக்கம் மனிதாபிமானமுள்ள, கலை மற்றும் வரலாற்றை அறிந்தவர்களை உருவாக்குவதாகும். எம்ஐடி, யேல் மற்றும் கொலம்பியா போன்ற வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் சமூகவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பம் தேவையான மாற்றங்களை கூடிய விரைவில் கொண்டு வரும் என அமைச்சர் கூறினார்.
சிஐஓ கிளப் தலைவர், டாக்டர் என்.ரவீந்திரன் தனது வரவேற்புரையில், இன்றைய சூழலில் சிஐஓ-க்கள் தங்கள் நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் ஆற்றுகின்றனர் என்றார்.
சிறப்பு விருந்தினரை கோயம்புத்தூர் மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஓ.ஏ.பாலசுப்ரமணியன் அறிமுகப்படுத்தினார். செயலர் எஸ்.கருணாநிதி நன்றியுரை ஆற்றினார்.
அந்நிகழ்ச்சியின் போது தங்கள் நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் எல்ஜி எக்யூப்மெண்ட் லிட். நிறுவனத்தின் சுபோத் நாயர், சுகுணா புஃட்ஸ் நிறுவத்தின் ஜி.என்.பிரபு, கே.பி.ஆர். மில் லிட். நிறுவனத்தின் ஸ்ரீதர் மற்றும் ஆர்ய வைத்ய பார்மஸியின் ஜிதேஷ் கோபிநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.