March 6, 2024 தண்டோரா குழு
சி.ஐ.ஐ.இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் மகளிர் மாநாடு,2024 ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
இம்மாநாட்டில் சி.ஐ.ஐ.கோவை தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.யங் இந்தியன் அமைப்பு கோவை தலைவர் விஷ்ணு பிரபாகர் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டிற்கு தலைமை வகித்த ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி மாநாடு மலரை வெளியிட்டார்.
இம்மாநாட்டில் பேசிய ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி,
பெண்கள் வெற்றி பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் போது ஏராளமான சவால்களை சந்திக்கும் சூழல் ஏற்படும்.அதை நம் மதிநுட்பத்தால் எதிர்த்து போராடி வெல்ல வேண்டும். அதற்கான சக்தியை நம் மனதில் வரவழைத்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு விஷயத்தையும் பகுத்து ஆராயும் போது நமக்கான விடை கிடைக்கும், அதுவே நாம் சந்திக்கும் சந்திக்கப்போகும் பிரச்னைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வாக அமையும்.என் வாழ்வில் ஏராளமான பிரச்னைகளையும்,சவால்களையும் எதிர்க்கொண்டிருக்கிறேன்.அதை வெற்றிகரமாக மாற்றுவது நம்மிடம் உள்ள விவேகமும் ஆளுமைத்திறனால் மட்டுமே முடியும்.
அதனால் தான்,நான் கல்வி நிறுவனங்களை தாண்டி ஏராளமான உற்பத்தி மற்றும் தொழில் மையங்களை நிறுவி பல வர்த்தகங்களை மேற்கொள்ள முடிகிறது. ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி,ஏற்றுமதியும் செய்ய முடிந்தது. நம்மால் நமக்கு மட்டுமல்ல நம் சமூகத்திற்கும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதற்கான பொறுப்பு நம் கைகளில் உள்ளது. ஒவ்வொரு பெண்ணும் முதலில் தனது வளர்ச்சி அடுத்து குடும்பம்,சமூகம், தேசத்தின் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு வாழ வேண்டும் அப்போது வெற்றி என்பது மிகவும் எளிதாக மாறிவிடும்.
இவ்வாறு மலர்விழி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆந்திர மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அருணா பகுகுனா, இந்தியகடற்படையை சேர்ந்த ஸ்ரீஸ்திதாக்கூர் ஆகியோர் பேசினர். யங் இந்தியன்ஸ் அமைப்பு கோவை பிரிவு இணை தலைவர் நீ்ல் கிக்கானி நிறைவுறையாற்றினார்.