March 29, 2024 தண்டோரா குழு
கோவையை சேர்ந்த நிறுவனமான செல்லக்ஸ் (CELLEX) பேட்டரி தயாரிப்பு நிறுவனம் கடந்த சில வருடங்களாக பேட்டரி தயாரிப்புகளில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி ஆற்றல் சேமிப்பு துறையில் அதிக கவனம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் செல்லக்ஸ் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தனது புதிய தயாரிப்பான செல்டேன் (CELTAN) எனும் புதிய பேட்டரியை அறிமுகம் செய்து உள்ளனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஐ.டி.சி.ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இதற்கான அறிமுக விழாவில் புதிய செல்டேன் பேட்டரியை இந்தியன் கடற்படை அதிகாரியான தமிழகத்தை சேர்ந்த பாலசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து புதிய செல்டேன் பேட்டரியின் திறன்கள் குறித்து செல்லக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான பிரமோத் மாதவன், இணை நிறுவனர் ஜோஸ் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர்.
புதிதாக தற்போது வணிகச் சந்தையில் நுழையும் செல்டேன் லித்தியம் பேட்டரிகள் அதன் மேம்பட்ட ஆற்றல் சேமிப்பு தீர்வை அறிமுகப்படுத்த உள்ளது. முழுக்க இந்திய தயாரிப்பான இந்த பேட்டரிகள் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் நல்ல செயல் திறனோடு இயங்கும் எனவும் அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என தெரிவித்தனர்.
குறிப்பாக பேட்டரி தயாரிப்பில் இந்திய மற்றும் உலக சந்தையில் கோவை நகரம் குறிப்பிட்ட வளர்ச்சியை பெறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.