April 12, 2024 தண்டோரா குழு
கோவை இருகூர் தொடக்கப்பள்ளியில் கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக ரூபாய் 14 இலட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறைகள் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.
கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக அதன் தலைவர் புவனா சதீஷ்குமார் தலைமையில் சமூகத்தில் பின் தங்கிய ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை,சமுதாய நலன் கருதி போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், மருத்துவ உதவி, போக்குவரத்து சிக்னல்கள் அமைக்க நிதி உதவி என பல்வேறு சமூக நலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக, கோவை இருகூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க பள்ளி வளாகத்தில், கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக புதிய இரண்டு வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டது.ரூபாய் 14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடத்தை மாணவர்கள் பயன்பாட்டு அர்ப்பணிக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் தலைவர் புவனா சதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில்,செயலாளர் ஸ்ரீ வித்யா முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இன்னர் வீல் கிளப் 320 மாவட்ட தலைவர் அனிதா நஞ்சையா கலந்து கொண்டு புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
இது குறித்து புவனா சதீஷ்குமார் கூறுகையில்,
கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக பல்வேறு சமூக நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும்,அரசு பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளின் கல்வியின் நலன் கருதி இந்த புதிய வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புதிதாக துவங்கப்பட்ட வகுப்பறைகள் ஸ்மார்ட் வகுப்பறைகளாக செயல் படும் விதமாக புதிய ஸ்மார்ட் டி.வி.யும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் இன்னர்வீல் கிளப் நிர்வாகிகள்,பள்ளி தலைமையாசிரியர்,ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்..