April 15, 2024 தண்டோரா குழு
கோவையில் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வகையில் புதிய எலக்ட்ரிக் சைக்கிள் ரக பைக்குகளை ரவுண்ட் டேபிள் இந்தியா 20 மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பினர் வழங்கியுள்ளனர்.
மக்கள் இருக்கும் இடங்களுக்கே உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உண்ணும் பழக்கத்திற்கு பெரிதும் மாறி வரும் நிலையில் இதில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இதில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் எடுத்து,ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஜோமோட்டாவுடன் இணைந்து ரவுண்ட் டேபிள் இந்தியா 20 மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பினர் இணைந்து 22 மாற்றுத்தறனாளிகளுக்கு புதிய நியோமோஷன் எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக எலக்ட்ரிக் மூன்று சக்கர சைக்கிள் ரக பைக்குகளை வழங்கி உள்ளனர்.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவை திபேந்தர் சிங் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில், ரஙுண்ட் டேபிள் இந்தியா 20 தலைவர் ராகுல் ராஜன்,லேடீஸ் சர்க்கிள் இந்தியா சேர் பெர்சன் ஐஸ்வர்யா,ஏரியா சேர்மன் பங்கஜ் பையா ஆகியோர் கலந்து கொண்டு மொத்தம் 24 இலட்சம் மதிப்பில் 22 வாகனங்களை மாற்றுத்தறனாளிகளுக்கு வழங்கினர்.
இரண்டு கியர்கள் அமைப்புடன் உணவு வகைகளை பின்புறம் வைக்க பிரத்யேக பாக்ஸ்,முன்புற விளக்கு என இரு சக்கர வாகனங்களுக்கான அனைத்து அம்சங்களும் கொண்ட இந்த வாகனம் மூலமாக, மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பணிகளுக்கான பிரத்யேக வாகனத்தையும் வழங்கி இருப்பது அனைவரின் பாராட்டுதலையும் பெற்று வருவது குறிப்படதக்கது.