January 23, 2017
தண்டோரா குழு
திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்கவில்லை என்பதால் கோபம் கொண்ட ஒருவர் 59 வயது முதியவரைத் தாக்கியிருக்கிறார்.
இது குறித்து மும்பை காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (ஜனவரி 23) கூறியதாவது:
மும்பை மாநிலத்தில் கோரேகான் பகுதியில் உள்ள திரைப்பட அரங்கத்தில் “டங்கல்” என்னும் இந்தித் திரைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. இத் திரைபடத்தைக் காண மக்கள் மிகுந்த ஆவலோடு வந்திருந்தனர். திரைப்படத்தின் காட்சிக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது எல்லோரும் எழுந்து நின்றனர். ஆனால், 59 வயது அமல்ராஜ் தாசன் என்பவர் மட்டும் எழுந்து நிற்கவில்லை.
இதை திரைப்படம் காண வந்த ஒருவர் அமல்ராஜைக் கண்டித்தார். அதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, கைகலப்பு ஏற்பட்டது. கோபம் கொண்ட அந்த நபர் அமல்ராஜ் முகத்தில் குத்தியுள்ளார். முகத்தில் காயமடைந்த அவரை அங்கு இருந்த மக்கள் வெளியே அழைத்துச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கியவர் பெயர் சிரிஷ் மதுகர் என்று தெரியவந்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் (இ.பி.கோ.) 323ஆம் பிரிவின்படி (தானாக முன்வந்து ஏற்படுத்தும் காயம்) மற்றும் 5௦4 பிரிவின்படி (வேண்டுமென்றே அமைதியைக் குலைக்கும் நோக்கம்) ஆகியவற்றின் கீழ் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.