January 24, 2017 தண்டோரா குழு
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு, சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை முதல்வர் பன்னீர்செல்வம் வாசித்தார்.
அப்போது முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நாளான டிசம்பர் 5 ம்தேதி தமிழகத்தின் இருண்ட நாள் ஆகும். தனது வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. தன்னுடைய திறமையாலும், பணிகளாலும் அனைவரின் அன்பைப் பெற்றவர். தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதலிடத்திற்குக் கொண்டுவர பாடுபட்டவர். தமிழக சட்டப் பேரவையில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றவர் எனக்கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசிய தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், “ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்ததை எண்ணிப் பெருமைப்படுகிறேன். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவை ஆளும் கட்சி என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப் பாடுபட்டவர் ஜெயலலிதா. எதற்கும் அஞ்சாமல் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றவர்” என்றார்.
காங்கிரஸ் சட்டப் பேரவைக் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துப் பேசினர்.
இதையொட்டி, அவையில் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.