August 14, 2024 தண்டோரா குழு
விவசாய விளைப் பொருட்கள் உணவாக மட்டுமின்றி பல வகைகளில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு துணை நிற்கிறது. இந்த நுட்பமான உண்மையை புரிந்து, அதையே வணிக வாய்ப்பாக மாற்றி சாதித்திருக்கிறார் தஞ்சை சேர்ந்த பெண் விஜயா மகாதேவன்.
விவசாயம் சார்ந்த காஸ்மெடிக்ஸ் பொருட்கள் தயாரிப்பதில் இன்று தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்திருக்கிறார். தனியொரு பெண்ணாக தன் வீட்டில் தொடங்கிய பயணம் இன்று 30-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் “வசீகரா வேதா” எனும் பெரு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. ‘விவசாயம் சார்ந்த சுய பராமரிப்பு பொருட்கள்’ என்கிற புதுமையான சிந்தனை எப்படி வந்தது என்பது குறித்து அவர் பேசுகையில் “எங்கள் நிறுவனத்தை 2017-இல் ஆரம்பித்தேன். இதன் நோக்கம் “க்ரீன் பாத்ரூம்”. அதாவது காலையில் தொடங்கி இரவு உறங்க செல்லும் வரை நம் அன்றாட பயன்பாட்டில் இருக்கும் பொருட்களான பல் பொடி, டூத் பேஸ்ட் தொடங்கி குளியல் பொடி, ஷாம்பூ, எண்ணெய் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் ரசாயனத்தால் ஆனவை.
எனவே இந்த ரசாயன பொருட்களாலும், இதை பயன்படுத்திய பின் வெளியேறும் நீராலும் மனிதர்களுக்கும் , நிலத்திற்கும் பெரும் பாதிப்பு. இச்சுழலை நம் பாரம்பரியமான வழிகாட்டுதல்கள் மூலம் மாற்ற நினைத்தோம். எனவே இயற்கையோடு இசைந்து நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதைப் போலவே நாமும் இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் “வசீகர வேதா” நிறுவனம்.
அந்த வகையில், நமக்கு முந்தைய தலைமுறையினர் அவர்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வந்த கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ, செம்பருத்தி, குப்பை மேனி போன்ற பொருட்களையே எங்கள் தயாரிப்புகளின் மூலப் பொருட்களாக வைத்திருக்கிறோம். இந்த பொருட்கள் அனைத்தையும் நாங்களே தரமான முறையில் எங்கள் விவசாய நிலத்தில் உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறோம்.
ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு இருக்கவில்லை, ஆனால் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அதிகரித்தார்கள். இன்று 13,000-த்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறோம்.
கொரோனோ காலத்தில் தொடங்கிய தொழில் என்பதால் சமூக வலைதளத்தில் எங்கள் நிறுவனத்திற்கான வரவேற்பு அதிகமாக இருந்தது. ஒரு கடையை தொடங்கினால் கூட ஒரே நாளில் 100 வாடிக்கையாளர்கள் வருவது அரிது தான், ஆனால் சமூக வலைதளத்தை பயன்படுத்தி சந்தைப்படுத்தியதால் இன்று ஒரே நேரத்தில் பல்லாயிரம் பேரை சென்றடைய முடிந்திருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.
தன் வீட்டின் கதவுகளுக்கு பின் தொடங்கிய இந்த நிறுவனம் உலகின் உயரமான கட்டிடங்களுள் ஒன்றான துபாய் புர்ஜ் கலீபாவில் இடம்பிடிக்க வேண்டும் எனும் பெருங்கனவுடன் தான் செயல்படுவதாகவும் கூறுகிறார்.
இவருடைய வெற்றிக்கு இவர் பின்பற்றிய உத்திகளை தன் யூடியூப் சேனல் வாயிலாக தொடர்ந்து சொல்லி வருகிறார். இந்த வழிகாட்டுதல்கள் மேலும் பல விவசாயிகளை, பெண்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் கோவையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் “அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா”வில் பங்கேற்று பேச இருக்கிறார்.
இவரை போலவே மேலும் பல வேளாண் தொழில்முனைவோர்களும், வல்லுநர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விவசாய பொருட்களை மதிப்பு கூட்டுதல், பிராண்டிங் செய்தல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து பேச இருக்கிறார்கள். இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.