August 19, 2024 தண்டோரா குழு
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கௌரவ தலைவர் முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் தோல் தானம் விண்ணப்பத்தை கங்கா மருத்துவமனை மருத்துவர் ராஜா சண்முகம் கிருஷ்ணனிடம் வழங்கினார்.
கோவையில் கங்கா தோல் தானம் மையம், nஅகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்,வோல்ட் மலையாளி கவுன்சில் மற்றும் ரோட்டரி 3201 இணைந்து தோல் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று கோவையில் முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களின் இல்லத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் தலைமையில், பொதுச்செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மகளிரணி தலைவி தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன், மாநில தலைவர் ராஜேஷ்குமார், துணை தலைவர் செந்தில் குமார்,சந்திரசேகர்,குமார் தங்கவேல்,சிவசக்தி மற்றும் கோல்டு மலையாளி கவுன்சில் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தோல் தானம் செய்வதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் தாமாகவே முன் வந்து தோல் தானம் செய்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கங்கா மருத்துவமனை மருத்துவர் பிளாஸ்டிக் சர்ஜன் ராஜா சண்முகம் கிருஷ்ணனிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வு குறித்து முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் கூறியதாவது,
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்,கங்கா மருத்துவமனை, ரோட்டரி 3201 வேல்டு மலையாளி கவுன்சில் ஆகியோர் ஒன்றிணைந்து தோல் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்வை ஏற்படுத்தி உள்ளார்கள்.இது மிகவும் அற்புதமான மற்றும் அத்தியாவசியமான நிகழ்ச்சியாகும்.
அனைவருக்கும் கண் தானம் உள்ளிட்ட உறுப்பு தானம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளது.ஆனால் தோல் தான் என்பது குறித்து நானே இப்போது தான் கேள்வி படுகிறேன். ஒருவர் மறைந்த பின்னும் தீக்காயம் பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்து முடிகின்றது.ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு.அதேபோல் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு சிறப்பு உண்டு முதல் ஆண்டு காகித விழா, இரண்டாம் ஆண்டு பருத்தி விழா, மூன்றாம் ஆண்டு தோல் விழா,நான்காம் ஆண்டு மலர் விழா,ஐந்தாவது ஆண்டு மரம் விழா என்று நூறாண்டுகளுக்கும் சொல்லிக்கொண்டே போகலாம்.இதில் தோல் தானம் முக்கியத்துவம் பெறுகிறது.நீ உனக்கு தெரிந்தவருக்கு உதவி செய்தால் நீ மனிதன்,அதுவே உனக்கு தெரியாதவனுக்கு உதவி செய்தால் நீ தெய்வம்.நாம் மறைந்த பின் செய்கின்ற தோல் தானத்தால் நாம் தெய்வம்மாகிறோம். எனவே பொதுமக்களுக்கு தோல் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.