August 22, 2024 தண்டோரா குழு
என்சங்கமித்திரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்றுகள் நட விழா மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் என பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை கட்டிடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருப்பூர் முத்தமிழ் சங்கத்தலைவர் கே.பி.கே.செல்வராஜ் வகித்தார்.சங்கமித்ரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளையின் அறங்காவலர் வி.சிந்து அனைவரையும் வரவேற்றார்.பொள்ளாச்சி நகரமன்றத் தலைவர் சியாமளா தலைமை நவநீதகிருஷ்ணன்,எஸ்.பி.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹேண்ட் இன் ஹேண்ட் தன்னார்வ தொண்டு நிறுவன உதவிப்பொது மேலாளர் யோ.ஜெயப்பிரகாஷ்,மருத்துவர் கே.சுப்பிரமணியம்,கே.ஏ.பாலு,எஸ்தர் ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ( ஓய்வு ) மற்றும் தமிழ்நாடு திரைப்பட விருதுகள் தேர்வு குழு தலைவர் கே.பி.கே. வாசுகி மரக்கன்றுகளை நட்டு வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள்
வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில்,
நீதிபதியாக பணியாற்றிய தருணங்களில் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தாக்குதல் மற்றும் பிற விஷயங்களுக்கு எதிரான பல வழக்குகளை விசாரித்து தீர்பளித்துள்ளேன். பெண் குழந்தைகளை வளர்ப்பவர்கள் உங்கள் பெண் குழந்தைகளிடம் இந்தவிஷயங்களைச் செய்ய வேண்டாம் அதைச் செய்ய வேண்டாம் என்று சொல்லுவதைத் தவிர்த்து அவர்கள் போக்கிலேயே விட்டு விட்டால் அவர்கள் சிறப்பாக வருவார்கள். மாறாக உங்கள் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் பாட்டி , தாய் ,தங்கை சமத்துவம் மற்றும் பிற உள்ளிட்டவர்களிடம் பெண்களிடம் மரியாதையுடனும் நடந்து கொள்ளவேண்டும் என்பதைக்கற்றுக்கொடுத்தால் தான் கொல்கத்தாவில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகள் சம்பவங்கள் போல் நடைபெறாமால் தடுக்க முடியும். குழந்தைப் பருவத்திலேயே குழந்தைகளுக்கு மதிப்பு மரியாதை மற்றும் ஒழுக்க நெறிகளைக் கற்றுக்கொடுப்பது அவசியமான ஒன்றாகும்.
அதன்மூலம் எதிர்காலத்தில் அவர்கள் சமூகத்தில் ஒழுக்கம் உள்ள நல்ல மனிதர்களாக மாறுவதற்க்கு வாய்ப்பாக அமையும்.ஒவ்வொரு தனிமனிதனும் சிறந்த சமுதாயம் மற்றும் சிறந்த தேசத்தை உருவாக்க உழைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
சுற்றுச்சுழலைப் பாதுகாப்பதில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். இயற்கையை பாதுகாக்க தவறினால் சுனாமி மற்றும் வயநாடு நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை நம்மால் தடுக்க முடியாது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சங்கமித்திரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளை தொண்டு நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளையும், பல்வேறு துறையில் திறன் வாய்ந்தவர்களை தேர்வு செய்து விருது வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது என்று நீதிபதி கே.பி.கே.வாசுகி குறிப்பிட்டார்.
தன்னார்வ வாழ்த்துரை வழங்கிய எஸ்தர் ராணி பேசும் போது, வீட்டிற்க்கு அருகில் மரங்களை நட்டால் வீட்டைச் சுற்றி வேர்கள் பரவி கட்டிடத்தை சேதப்படுத்தும் என்ற தவறான எண்ணம் உள்ளது. இலைகள் , காய் பூக்கள் உதிர்ந்து குப்பைகள் உருவாகும் என்ற காரணங்களால் நடவு செய்யாமல் இருக்க கூடாது. கரிமக் கழிவுகளை எல்லாம் ஒன்றாகக் கொட்டாமல் தனித்தனியாகப் பிரித்து மண் உரமாகப் பயன்படுத்துங்கள். மாநகராட்சியில் பணிபுரிபவர்கள் , ஒன்றாக வீசப்படும் கழிவுகளை பிரித்து எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர் . அவர்களுக்கு குப்பைகளை பிரித்து கொடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . வீட்டிற்க்கு இரண்டு மரங்கள் வளர்க்க அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என்று பேசினார் .
பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் ஸ்ரீநகர் வள்ளி கும்மி குழுவினரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முன்னதாக கொல்கத்தாவில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மறைந்த மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கவிஞர் கவிதாசன் சார்பில் சிந்தனைத்துளிகள் -100 புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவிஞர் தெ.வி.விஜயகுமார் செய்ததோடு தொகுத்தும் வழங்கினார். நிறைவாக தேன்மொழி நன்றி தெரிவித்தார்.