September 30, 2024 தண்டோரா குழு
அம்ருதபுரி, கேரளா – ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி (அம்மா) அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு,மாதா அம்ருதானந்தமயி மடம் கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில்,ஒரு பேரிடர் நிவாரண முயற்சியை அறிவிக்க உள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிர் பிழைத்தவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், இப்பகுதியில் நிலச்சரிவினைத் தாங்கும் திறனை மேம்படுத்துவதற்கும், ₹15 கோடி ($1.8 மில்லியன் அமெரிக்கன் டாலர்) உதவித் தொகையை மாதா அம்ருதானந்தமயி மடம் ஒதுக்கியுள்ளது. அம்ருதா விஸ்வ வித்யாபீடத்துடன் இணைந்து, மாதா அம்ருதானந்தமயி மடம், வயநாட்டில் பாதிப்பிற்கு உட்பட்ட பகுதிகளில் மேம்பட்ட நிலச்சரிவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்,பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளின் அதிகரித்து வரும் அபாயத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் செயல்பட உள்ளது.
கேரள மாநில அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அனுமதி கிடைத்தவுடன் இத்திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும்.2024 ஜூலை 30 அன்று, புஞ்சிரிமட்டம், முண்டக்காய், சூரல்மலா மற்றும் வெள்ளரிமலா ஆகிய கிராமங்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலச்சரிவை கருத்தில் கொண்டு இந்த முயற்சி துவக்கப்பட்டுள்ளது. கேரளாவின் வரலாற்றில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளில் இது மிகவும் மோசமான ஒன்றாகும்.இதனால் 400-க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல் சுமார் 397 பேர் கடுமையாக காயம் அடைந்தனர்.
மேலும் 118 பேர் இன்னும் கண்டறியப்படவில்லை என பதிவு செய்யப்பட்டுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட இந்த பாதிப்பைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இது போன்ற உயிரிழப்பைத் தடுப்பதில் இந்தத் திட்டம் முக்கியப் பங்களிக்கும் என மடம் உறுதியாக நம்புகிறது.
மாதா அம்ருதானந்தமயி மடத்தின் துணைத் தலைவர் ஸ்வாமி அம்ருதஸ்வரூபானந்தாபுரி, இம்முயற்சி குறித்து கூறுகையில்,
“பேரழிவுகள் உட்பட எந்த ஒரு சூழ்நிலையிலும் அம்மாவின் அணுகுமுறை கருணையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.ஆன்மீக வாழ்வானது கருணையில் துவங்கி,கருணையில் நிறைவடைகிறது என்று அவர் நம்புகிறார். எனவே தான் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளிலிருந்து உயிர் பிழைத்தவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று அம்மா விரும்புகிறார்.இது அவர்களின் நீண்ட கால பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்துகிறது. 15 கோடி நிதியுதவியுடன், அம்ருதா நிலச்சரிவு முன்னெச்சரிக்கை அமைப்பை (A-LEWS) செயல்படுத்தி, அதன் தொடர்பான தேவைகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
முழுமையான மதிப்பீட்டிற்கு பின், ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சமூகத்தின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு செலவிடப்பட்ட நிதி தொகுத்து வழங்கப்படும். கேரள மாநில அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அனுமதி கிடைத்தவுடன், அம்ருதா நிலச்சரிவு முன்னெச்சரிக்கை அமைப்பு திட்டத்திற்கான பணிகள் துவக்கப்படும்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவு குறித்த முதற்கட்ட மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு, பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி அவர்கள், நிலச்சரிவுகளின் பாதிப்பை மதிப்பிடுவதற்கு அம்ருதாவிலிருந்து நிபுணர்கள் குழுவை அனுப்பினார். அவரது அறிவுறுத்தலின்படி, மேப்பாடி, பொழுதானை மற்றும் வயித்திரியில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளையும் குழுவினர் பார்வையிட்டனர்.
இக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் தான், ₹15 கோடி மதிப்புள்ள இத்திட்டமானது வகுக்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட உள்ளது.இப்பகுதிகளில், நிலச்சரிவைக் குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் முன்னெச்சரிக்கை அமைப்புகள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் வரவிருக்கும் நிலச்சரிவுகளைக் குறித்த எச்சரிக்கைகளை சரியான நேரத்தில் பெறலாம்.நிகழ்நேரத்தில் இத்தகைய அபாயத்தைக் கண்காணிக்க மாவட்ட மற்றும் மாநில அதிகாரிகளுக்கான அதிநவீன காட்சிப்படுத்தல் டாஷ்போர்டும் இதனுள் அடக்கம்.
வயர்லெஸ் நெட்வொர்க்குகள் மற்றும் பயன்பாடுகளுக்கான அம்ருதா மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குனர் டாக்டர் மனீஷா வி ரமேஷ் கூறுகையில்,
“அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் ஆராய்ச்சியாளர்கள், மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் வடகிழக்கு இமயமலைகள் இரண்டிலும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அம்ருதா நிலச்சரிவு முன்னெச்சரிக்கை அமைப்பை (A- LEWS) நடைமுறைப்படுத்தியுள்ளனர். 2009-ஆம் ஆண்டு முதல், இவ்வமைப்பு நிகழ்நேர முன்னெச்சரிக்கைகளை வழங்குவதன் மூலம் மனித உயிர்களை பேரழிவுகளிலிருந்து திறம்பட காப்பாற்றி வருகிறது. எங்கள் பல்கலைக்கழகத்தின் வேந்தர், ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி (அம்மா) அவர்களின் வழிகாட்டுதலின் படி, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்தி, அங்குள்ள உயிர்களைப் பேரிடரிலிருந்து பாதுகாக்கும் அமைப்புகளை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம். வயநாட்டின் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அம்ருதா நிலச்சரிவு முன்னெச்சரிக்கை அமைப்பை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பிற்காக அம்மா மற்றும் மாதா அம்ருதானந்தமயி மடத்திற்கு நாங்கள் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
அம்ருதாவின் புதுமையான அணுகுமுறைகள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. 2017-ஆம் ஆண்டு முதல் நிலச்சரிவுகள் தொடர்பான சர்வதேச கூட்டமைப்பால் (ICL), நிலச்சரிவு அபாயத்தைக் குறைப்பதில், அம்ருதா விஸ்வ வித்யாபீடம் தலை சிறந்த மையமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. 2023- ஆம் ஆண்டு, அம்ருதாவின் ஒப்பற்ற பேரிடர் மேலாண்மையைப் பாராட்டும் வகையில் அவர்ட்டட் டிஸாஸ்டர் விருதைப் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
மாதா அம்ருதானந்தமயி மடத்தின் மனிதாபிமான முயற்சிகள், எழை எளியோர்க்கு உணவு, தங்குமிடம், சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை வழங்குவதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. இவற்றுள் பேரிடர் மீட்பிற்கென தனி கவனம் செலுத்துகிறது. பேரழிவுகளின் கடுமையான விளைவுகளிலிருந்து மக்களை மீட்க, 2001-ஆம் ஆண்டு முதல், இந்தியா முழுவதும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்காக, அம்மா சுமார் ₹700 கோடி ($83 மில்லியன் யு.எஸ்.டாலர்) அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.