January 25, 2017 தண்டோரா குழு
“சிரியாவில் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள்“ என்று அந்நாட்டின் ஏழு வயது சிறுமி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப்பை உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறாள்.
பானா அல்-அமெத் (7) என்ற அச்சிறுமி உருக்கமான கடிதத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு அனுப்பியிருக்கிறாள். சிரியாவைச் சேர்ந்த இந்தச் சிறுமி தன்னுடைய டிவிட்டர் மூலம் உலகப் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.சிரியாவில் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள அலெப்போவை மீட்க ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
அலெப்போவில் நிகழும் தாக்குதல்கள், பொதுமக்களின் நிலை ஆகியவை குறித்து சிறுமி டுவிட்டரில் பதிவுகள் இட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தாக்குதல் தீவிரம் அடையவே, சிரியாவிலிருந்து அச்சிறுமி துருக்கிக்குச் சென்றார்.
இந்நிலையில் சிறுமி பானா அல்-அமெத் அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறாள்.
அதில், “சிரியாவில் நடைபெற்று வரும் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் தானும் ஒரு பெண். அலெப்போவில் உள்ள ஒரு பள்ளியில் படித்தேன். அப்பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் அப்பள்ளி முற்றிலும் சேதமடைந்துவிட்டது.
அதில் எனது நண்பர்கள் ஏராளமானோர் உயிரிழந்துவிட்டனர். அவர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஏனெனில் அவர்களுடன் நான் விளையாடி மகிழ்ந்திருக்கிறேன்.
தற்போது என்னால் அலெப்போவில் உள்ள அப்பள்ளியில் விளையாட முடியாது. அந்த நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. தற்போது துருக்கியில் இருக்கிறேன். இங்கு சுதந்திரமாக எங்கும் செல்ல முடிகிறது ஆனால் சிரியாவில் போர் முடியும் வரை எங்கும் செல்ல விரும்பவில்லை.
சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளில் கொல்லப்பட்ட 3 லட்சம் பேரில், 15,000 பேர் குழந்தைகள், சிரிய குழந்தைகளுக்கு உதவி புரியுங்கள்” என அச்சிறுமி கடிதம் எழுதியுள்ளார்.