October 8, 2024 தண்டோரா குழு
நாட்டில் மது,போதை, ஆபாசம், தவறான உறவுகள் போன்றவை பெருகிவரும் நிலையில்,இவற்றை போன்ற ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி அகில இந்திய அளவில் 2024 செப்டம்பர் மாதம் முழுதும் ‘ஒழுக்கமே சுதந்திரம்’ எனும் மையக்கருத்தில் பரப்புரையை முன்னெடுத்து வந்தது.
இந்தப் பரப்புரையை முன்னிட்டு கோவையிலும்;அனைத்து சமயத் தலைவர்கள் ஒன்றினையும் கருத்தரங்கங்கள்,பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், நோட்டீஸ் விநியோகம்,இல்லங்களில் சந்திப்புகள்,அரங்கக் கூட்டங்கள்,தனி நபர் கவுன்சிலிங் வழங்குதல்,மாபெரும் கண்காட்சிகள்,பேரணி,மனிதச்சங்கிலி, சமூக வலைதள பிரச்சாரம்,பள்ளி – கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல்கள், உறுதி மொழி ஏற்பு நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்தப் பரப்புரையின் மாநில அளவிலான இறுதி நிகழ்வாக ‘மகளிர் மாநாடு’ கோவை போத்தனூர் PVG மஹாலில் இன்று நடைபெற்றது.தற்கால குடும்பங்களில் வேரூன்றியுள்ள தீமைகளையும் அதனை தவிர்த்திடும் வழிமுறைகளையும் எதார்த்தமாக எடுத்துக் கூறிடும் வகையில் ‘வேலிதாண்டும் வெள்ளாடுகள்’ எனும் தலைப்பில் நாடகம் அரங்கேற்றத்துடன் மாநாட்டு நிகழ்வுகள் துவங்கின.
தொடர்ந்து,மாநாட்டின் முதல் அமர்வு ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் மாணவிகள் அஸ்மிதா மற்றும் ஆஃபியா ஆகியோரின் இறைவசனங்கள் மற்றும் மொழிபெயர்ப்புடன் துவங்கியது.
மாநாட்டிற்கு வருகைபுரிந்துள்ள சிறப்பு விருந்தினர்கள்,அறிஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் JIH மத்திய மண்டலத் தலைவி கமருன்னிஸா
வரவேற்று உரை நிகழ்த்தினார்.தொடர்ந்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் P.S. உமர் ஃபாரூக் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ மாநாட்டு சிறப்புரையாற்றினார்.‘மனித சமூகம் சிறந்த ஒழுக்க மாண்புகளைக் கொண்டுள்ள வரை மட்டுமே வளர்ச்சியும்,மேன்மையும் அடைந்திட முடியும்.அவற்றை கடைபிடிக்கும் வரையில் மட்டுமே மனிதகுலம் நிலைகொண்டிருக்கும்.மது,போதை, தன்பால் உறவு,திருமணமின்றி சேர்ந்து வாழ்தல் போன்ற தீமைகள் தற்காலத்தில் அதிகரித்து வரும் சூழலில் இறைவழிகாட்டுதல்களை ஏந்தியுள்ள இந்தச் சமூகம் அனைத்து தரப்பு மக்களையும் ஒழுக்க மாண்புகளின் அடிப்படையிலான வாழ்வியலின் அவசியம் குறித்து உணர்த்துவதுடன் அவர்களுக்கான முன்னுதாரணமாக இருப்பதும் நம்மீது கடமை.’என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதனையடுத்து,தொடர்ந்து, இந்த மாநாட்டின் தீர்மானங்களை JIH மாநில மகளிர் பிரிவுச் செயலாளர் ஃபாத்திமா ஜலால் வாசித்தார்.
இரண்டாம் அமர்வின் முதல் நிகழ்வாக திருச்சி அஸ்ஸலாம் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி சிறப்புரையாற்றினார்.‘மனிதகுல வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒழுக்கவீழ்ச்சி தலைதூக்கிடும் போதும் அவற்றை சீர்செய்திட சிறந்த குணநலன்களைக் கொண்ட மக்கள் ஒன்றிணைந்து முயற்சிப்பதும் அதனை மறுகட்டமைப்பு செய்வதுடன் மேலும் மேம்பாடடைந்திடச் செய்திடும் வகையில் அதனை வழிநடத்தியும் உள்ளனர். நற்பண்புகள் மிகுந்த ஒரு சமூகத்தினை குடும்பங்களில் இருந்தே கட்டமைத்திட முடியும். எனவே, ஒவ்வொரு குடும்பத்தலைவரும்-தலைவியும் இதனை இலக்காகக் கொண்டே பிள்ளைகள் வளர்ப்பில் முனைப்புக் காட்டிட வேண்டும்.’ என்று அவர் கூறினார்.
அதனையடுத்து, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர் ஃபாத்திமா முஸஃப்பர் சிறப்புரை நிகழ்த்தினார். ‘சமூக மேம்பாடு மற்றும் மேன்மையினை வார்த்தெடுப்பதில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு சமூகம் சிறந்து விளங்கிட அதன் அடிப்படை மாண்புகள் சிறப்பானதாக அமைவது மிகவும் முக்கியமான காரணியாகும்.அப்படி வார்த்தெடுக்கப்பட்ட சமூகமே மனிதகுல வளர்ச்சிக்கும் பரிணாமத்திற்கும் பெரும் பங்களிப்பை வழங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அனைத்து வித சமூகத் தீமைகளிலிருந்தும் தூய்மையான, ஒழுக்க விழுமியங்களில் தலைசிறந்து விளங்கும் ஒரு இளைய சமூகத்தை வார்த்திட இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அனைத்து மகளிரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.’ என தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக,JIH கிழக்கு மண்டலத் தலைவி P.S. அஸ்மாபீ நன்றியுரை நிகழ்த்தினார். கோவைப் பெருநகரக் கிளையின் பெண்கள் பிரிவுத் தலைவி ஜஹீனா அஹமது.சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினார்.
மாநாட்டில் JIH கோவை மாநகரத் செயலாளர் சபீர் அலி, மாநாடு பொறுப்பாளர் பீர் முஹம்மது, மக்கள்தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.