October 21, 2024 தண்டோரா குழு
கோவை மாவட்டம் நிர்மலா கல்லூரி மாணவியான ஸ்ரீ தனது எழுத்து பயணத்தில் சிறப்பாக சாதனை படைத்துள்ளார். சுமார் 21 வயதில், எழுத்துலகில் பெரும் சாதனைகளைப் பதிவு செய்துள்ள ஸ்ரீ இதுவரை தனிப்பட்ட முறையில் 6 புத்தகங்களை வெளியிட்டு, பல தொகுப்புகளில் இணைந்து எழுதியுள்ளார்.
அமேசானில் கிடைக்கும் அவரது முதல் புனைகதை நூல் “கிரிம்சன் நைஃப்” மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, “ஹேசல்நட் ஆல்மண்ட் டகுவாஸ்”, “டிராகன்-ஃபையர் க்ரானிகிள்ஸ்”, “தி டெப்ட் பிரைடு”, “ஷாடோஸ் ஆஃப் மிஸ்கான்சப்ஷன்”, “தி சிண்டிகேட்” உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார்.
இளம் வயதிலேயே, ஈன்க்ஸாய்டு மற்றும் க்ளோரியஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் போன்ற உலகப் பதிவுகள் மூலம் சிறந்த சாதனையாளராக ஸ்ரீ அறிவிக்கப்பட்டார். சிறிது காலத்திலேயே நீண்ட நாவல்களை எழுதியமைக்காக உலக சாதனையைப் பெற்றிருப்பது, அவரது எழுத்து திறனையும், அவரின் கதை சொல்லும் திறனையும் வெளிப்படுத்துகிறது.
அவரின் படிப்புப் பின்னணி மற்றும் ஆங்கில இலக்கியத்தில் பெற்ற பட்டம், அவரது எழுத்து பயணத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது.மாணவி ஸ்ரீ, நிர்மலா கல்லூரியில் தற்போது தனது எம்.ஏ பட்ட படிப்பை படித்து வருகிறார்.படிப்பு மட்டுமல்லாமல், சினிமா, பயணங்கள் மற்றும் மனிதர்கள் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். அவர் ப்ளாகர் தளத்தில் தனது படைப்புகளை பகிர்ந்து வருகிறார். அவரது “வாம்பயர் வவுஸ்: ப்ளட் பவுண்ட்” மற்றும் “லூனார் லெகசி” ஆகியவை வாரம் தோறும் புதுப்பிக்கப்படுகின்றன. “தி டெப்ட் பிரைட்” மற்றும் “தி சிண்டிகேட்” ஆகியவை தனித்திறனுடன் Wattpad இல் பரிசளிக்கப்பட்டுள்ளன.
காதல், த்ரில்லர், அதிரடி மற்றும் புனைகதை வகைகளில் எழுதிக்கொண்டிருக்கும் ஸ்ரீ, ஒரு நாள் திரைப்பட இயக்குனராக உயர்வதே தனது கனவாகக் கொண்டுள்ளார். எழுத்துலகில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறையிலும் தனது அடையாளத்தை உருவாக்குவதே தனது இலக்கு என தெரிவித்தார்.
அவரது இளமையும், ஆற்றலும் கல்லூரி நலவாழ்வும் பெருமையாகக் கருதப்படும் வகையில், கோவை நிர்மலா கல்லூரி சார்பில், ஸ்ரீ யின் வெற்றியை பாராட்டி, கல்லூரி செயலாளர் சகோதரி குழந்தை தெரேஸ் முதல்வர் சகோதரி பபியோலா, துணை முதல்வர் சகோதரி டெல்டா மேரி, நூலகர் சகோதரி ஜாக்லின் மெரி, ஆங்கில துறை தலைவர் மஞ்சுகுமாரி பெற்றோர் குமரன் நந்தினி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.