October 25, 2024 தண்டோரா குழு
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இனிப்புகள் தயாரிப்பில் மட்டுமே அல்லாமல்,அதன் சமூகப் பொறுப்பினை உணர்ந்து, பல்வேறு சமூக நலத்திட்டங்களில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சமூக நலத்திட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களிடம் பெறும் ஆதரவை சமூகத்திற்குத் திருப்பி கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறது.
சமூகத்துக்கு இனிமையான பங்களிப்பு என்ற தத்துவத்துடன் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்,கோவை மெட்ரொபாலிஸ் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து அமரர் அமுதச்செம்மல் என். கே. மகாதேவ அய்யர் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் பொருட்டு கோவை அரசம்பாளையம் கிராமம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வசதிக்காக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் (ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ரூபாய் 25 லட்சம் மற்றும் கோவை மெட்ரொபாலிஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் 25 லட்சம்) நான்கு வகுப்பறை கட்டிடங்களை, கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா 25.10.2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை அரசம்பாளையம் பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:
தமிழகம் நாட்டில் வளரச்சி பெற்ற மாநிலமாக திகழ்கிறது.இந்த வளர்ச்சிக்கு 1960 -70 ம் ஆண்டுகளில் நாம் கல்வி மற்றும் தொழில் துறையில் செய்த முதலீடுகள்தான் காரணம்.அதற்கு முன்பு வரை பீகார், உத்திரபிரதேசம் போல தமிழ்நாடு வறுமையின் பிடியில் இருந்தது. தமிழ்நாட்டிலும் வறுமை கோட்டிற்கு கீழே பலர் இருந்தனர்.ஆனால் 1980 – 90 ம் ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறி நமது மாநிலம் முன்னேற்றப்பாதைக்கு திரும்பியது.அதற்கு 70 ஆண்டுகளில் நாம் செய்த முதலீடுகளும், கடும் உழைப்பும்தான் காரணம். உலக மயமாக்கலுக்குப்பிறகு தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் பீடு நடை போட்டு வருகிறது.
கோவை மாவட்டம் மாநிலத்தில் வளர்ச்சி பெற்ற அனைவரும் விரும்பும் மாவட்டமாக, தொழில் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாப்ப்பை அதிகம் வழங்கும் மாவட்டமாக திகழ்கிறது.இதற்கு கோவை மருத்துவம், தொழில் துறைகளில் முன்னணி மாவட்டம் என்பது மட்டும் காரணம் அல்ல. கல்வியிலும் சிறந்த மாவட்டம் என்பது தான் காரணம். இந்த வளர்ச்சிக்கு கோவை தொழில்துறையினர் தொழில், மருத்துவம் கல்வித்துறையில் ஆற்றிய பங்களிப்புகள் தான் பெரிதும் காரணம்.சிஎஸ்ஆர் எனப்படும் தொழில் நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு திட்டம் அரசால் சட்ட பூர்வமாக கொண்டு வரப்படுதற்கு முன்பே கோவை தொழில் நிறுவனங்கள் சமுதாய பணிகளில் உரிய பங்களிப்பை ஆற்றி உள்ளன.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் பசியோடு பாடம் படிக்க கூடாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தோடு, காலை சிற்றுண்டி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. எமிஸ் என்கிற பள்ளி மேலாண்மை திட்டம் வாயிலாக மாணவ, மாணவியரின் அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டு மேலாண்மை செய்யப்படுகிறது. இதன்மூலம் மாணவர்களின் கற்றல் திறன், தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட அனைத்தும் தொடர்ந்து கண்காணிப்படுகிறது. பிளஸ் டூ முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களின் சதவீதம் கண்காணிக்கப்படுகிறது.
கோவையில் கடந்த கல்வி ஆண்டு 95 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். எமிஸ் திட்டத்தில் திரட்டப்படும் தகவல்கள் மாணவர்களின் கல்லூரி கல்வி தரவுகளோடு இணைக்கப்பட்டு உயர்கல்வி முடிக்கும் வரை அவர்களுக்கு உதவுகின்றன. அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் தொண்டு நிறுவனங்கள்,பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பெரிதும் பங்காற்றி வருகின்றனர். கோவையில் கல்வி அமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்ட நம்ம ஊரு பள்ளி திட்டம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலேயே ரூ.14 கோடிக்கு பள்ளிகளுக்கு நிதி திரண்டது.
பள்ளிகளின் வளர்ச்சிக்கு நிதி உதவி செய்பவர்களுக்கு மாணவர்கள் நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்றால் கல்வியில் சாதித்து காட்ட வேண்டும். இந்த பள்ளி கட்டிடத்நிற்கு நிதி உதவி செய்த ரோட்டரி சங்கம்,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தினருக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.
இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம். கிருஷ்ணன் மற்றும் கோவை மெட்ரொபாலிஸ் ரோட்டரி சங்கத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.