November 28, 2024 தண்டோரா குழு
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து,போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் இன்று (28.11.2024) சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூலூர் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவம் இடமான காடம்பாடி அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது சுமார் 380 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தும்,இதேபோன்று கண்ணம்பாளையம் அருகே சென்று சோதனை மேற்கொண்டு சுமார் 120 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும்,மேலும் இது சம்மந்தமாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காளிதாஸ் (25) மற்றும் பழனியப்பன் மகன் நித்திஷ் (23)ஆகியோர்களை கைது செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.