January 26, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், “தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. அதே போல் மாலத்தீவு அருகே மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர், நாகை மாவட்டத்தில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது” என்றார் பாலசந்திரன்.