December 14, 2024 தண்டோரா குழு
பார்வைத்திறன் குறைபாடு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் விதமாக கோவையில் புதிய கருவி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
பார்வை திறன் குறைபாடு உள்ளவர்கள் பயன்பெறும் வகையில், ஹியர் சைட் எனும் புதிய கருவியின் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது.கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த கருவியை அணிவதன் மூலம் துல்லியமாக அதிலிருந்து வரும் ஒலி வாயிலாக தனக்கு எதிரில் உள்ள அனைத்து வகையான நிகழ்வு மற்றும் பொருட்களை ஒலி மூலம் அறிந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் கோவையில் முதல் கட்டமாக நூறு பயனாளிகளுக்கு ஹியர் சைட் கருவியை வழங்க செஷயர் ஹோம்ஸ் அறக்கட்டளையினர்,கரூர் வைஸ்யா வங்கி மற்றும் ஹியர் சைட் ஆடியோ விஷன் ஃபோர்ஜ் இன்னோவேஷன்ஸ் மற்றும் வென்ச்சர்ஸ் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்..
இதற்கான விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கலந்து கொண்டு புதிய ஹியர் சைட் கருவிகளை பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர்,
பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் இது போன்ற கருவிகள் அவர்களது வாழ்வில் புதிய வெளிச்சத்தை தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
விலை மிக அதிகம் கொண்ட இந்த கருவிகளை நடுத்தர மக்கள் பயன் படுத்தும் வகையில்,பார்வைத் திறன் இழந்தவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில்,இந்த கருவிகளை வழங்க முன்வந்துள்ள தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாக அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தனலட்சுமி கோவிந்தராஜன்,டிம் வேதநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.