December 18, 2024 தண்டோரா குழு
மாநில நெடுஞ்சாலைத்துறை கோவை மண்டல பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் சிஆர்ஐடிபி திட்டத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கான சாலை பராமரிப்பு பணிகள் சிறுபாலங்கள் சீரமைப்பு போன்றவற்றுக்காக 132 கோடி ரூபாயில் நான்கு ஒப்பந்த பணிகள் நடத்த டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கோவை சிறுவாணி ரோடு சீரமைப்பு , அவிநாசி மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் அவிநாசி திருப்பூர் பல்லடம் பொள்ளாச்சி கொச்சின் ரோடு பணிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
டெண்டர் திறப்பு மற்றும் ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் விதிமுறைகள் வெளிப்படையாக மீறப்பட்டிருப்பதாகவும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் புகார் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமை அலுவலகத்திற்கு புகார் தெரிவித்த ஒப்பந்ததாரர்கள் கூறுகையில்
அவிநாசி திருப்பூர் பல்லடம் பொள்ளாச்சி கொச்சின் ரோடு பணி புதுக்கோட்டையை சேர்ந்த ராமு அண்ட் கோ நிறுவனமும்
மற்ற மூன்று ரோடு பணிகள் சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா நிறுவனமும் டெண்டர் போட்டு போட்டி யாரும் இல்லாமல் இறுதி செய்திருப்பதாக தகவல் வெளியானது.
டெண்டர் போட வந்த மற்றவர்கள் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஒப்பந்ததாரர்கள் டெண்டர் போட முன்வந்த போது நெடுஞ்சாலைத்துறையில் உரிய அனுமதி வழங்கவில்லை. மேலும் கள ஆய்வறிக்கை சான்று வழங்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
அந்த சான்று இருந்தால் தான் டெண்டர் போட முடியும்.இதையும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்கள் மட்டும் வழங்கி வருகிறார்கள்.
ஏற்கனவே கோவை மேற்கு பைபாஸ் ரோடு பணியை எடுத்திருந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீ இன்ஃப்ரா நிறுவனத்தின் பணிகளை சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா நிறுவனம் சப் காண்ட்ராக்ட் என பறித்துக் கொண்டது.கோவை மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களை
முறையாக டெண்டர் போட்டு பணிகளை எடுக்க தடை நிலவுகிறது.இது போன்ற நடவடிக்கைகள் நேர்மையாக பணி செய்பவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஒப்பந்த பணிகளில் வெளிப்படை தன்மை நிலைமை உருவாக வேண்டும்.
கோவையில் சாலைப் பணிகள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.மேலும் இந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் பல்வேறு விசாரணை அமைப்புகளுக்கு புகார் தெரிவிக்கப்படும்.இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்க தேவையான முயற்சிகளை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
கோவையில் ரோடு வொர்க் ஒதுக்கீட்டில் முறைகேடு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.