January 12, 2025 தண்டோரா குழு
மேட்டுப்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் நடத்திய தேசிய இளைஞர் தின விழா பேரணியில் 1000 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதியை நமது இந்திய
அரசு 1984 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது.அதனை ஒட்டி
கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் தேசிய இளைஞர் தின விழாவை கொண்டாடும் முகமாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியை ஜனவரி மாதம் 10ஆம் தேதி காலை மேட்டுப்பாளையத்தில் நடத்தியது. மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மெட்ரோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் பள்ளிக்குழு தலைவர் எம்.தியாகராஜன் வரவேற்புரை ஆற்றினார்.
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தை சேர்ந்த சுவாமி புத்திதானந்தர் மகராஜ் அவர்கள் நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் வகிக்கும் முக்கிய பங்கு,சுவாமி விவேகானந்தரின் சேவைகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு பற்றி எடுத்துரைத்தார்.
மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் S.அதியமான் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்,
அவர் பேசுகையில், சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் சர்வ சமய மாநாட்டில் உரையாற்றிய பின்னர் இந்திய தேசத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்தது.
பகவான் ராமகிருஷ்ணரின் முதன்மை சீடர் சுவாமி விவேகானந்தர்..!
ஆன்மீகத்தை மட்டும் நம்புங்கள் என்று சொன்னவர்களுக்கு மத்தியில்,
ஆன்மீகத்தையும், அறிவியலையும் நம்புங்கள் என்று சொன்ன மகான் சுவாமி விவேகானந்தர்!
மதம்,கல்வி,வரலாறு,இசை,நாடகம், கலாச்சாரம்,ஆன்மீகம்,அறிவியல், விஞ்ஞானம் என சுவாமிஜி கால் பதிக்காத துறைகளே இல்லை எனக் கூறலாம்.
அனைத்து மதத்திற்கும் அப்பாற்பட்டு மனிதனை மனிதனாக பார்த்தவர்.
அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொண்ட மாபெரும் ஆன்மீகத் துறவி சுவாமி விவேகானந்தர்.
கடவுளைக் காண வேண்டுமானால் மனுதனுக்கு தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டியினில் வாடுகின்ற ஏழை நாராயணர்களுக்குச் சேவைச் செய்யுங்கள். அதுதான் உண்மையான தேச பக்தி என்றார்.
முதல்_நிகழ்வு:-
நம் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் மிதவாதிகளும், தீவிரவாதிகளும் நம்முடைய விடுதலை வேள்விக்கு இரு மார்க்கமாக போராடினார்கள். இருவர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தவர் சுவாமி விவேகானந்தர். ஒருபுறம் சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய காலடியில் அமர்ந்துகொண்டு நான் இந்திய தேசத்திற்காக போராடுவேன் என்றார்.
மற்றொருபுறம் மகாத்மா காந்தியடிகளோ விவேகானந்தரைப் படித்த பின்னர் இந்திய தேசத்தின் மீதான பற்று ஆயிரம் மடங்கு அதிகமானது என்றார். முதலாவது நிகழ்வு தீவிரவாதத்தையும் மிதவாதத்தையும் இந்த இரண்டு மாபெரும் இயக்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தவர் சுவாமி விவேகானந்தர்.
இரண்டாவது_நிகழ்வு:-
1962ம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் போர்க்களத்தில் இருந்த இந்திய ராணுவ வீரர்களிடம் உரையாற்றும் போது, இந்திய ராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் சுவாமி விவேகானந்தரை இதயத்தில் வைத்து போராட வேண்டும் என்று போர்க்களத்தில் கூறினார்.
மூன்றாம்_நிகழ்வு:-
1984 ஆம் ஆண்டு உலக நாடுகளில் எல்லாம் இளைஞர் தினம், இளைஞர் ஆண்டாக அறிவித்தபோது, அன்றைய பாரதப்பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரண புருஷராக, யாரை நாம் விழுமிய கல்வியாக முன்னிறுத்துவது என எண்ணியபோது, இந்திரா காந்தி அவர்களின் தலைமையின் கீழ் 1984 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக இந்திய அரசாங்கம் அறிவித்தது. அதனை தொடர்ந்து 1985ல் அதற்குரிய அரசாணை பிரகடனப்படுத்தப்பட்டது அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்திருமகான், வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இளைஞர்கள்,ஒழுக்கத்தையும், விழுமியங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்புரை நிகழ்த்தினார்.
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் உதவி செயலர் சுவாமி தத்பாஸானந்தர், சாது பெருமக்கள், மெட்ரோ பள்ளி முதல்வர் சுலோச்சனா, சுப மருத்துவமனை மருத்துவர் மகேஸ்வரன், என்.எஸ்.வி. இராமசாமி, முன்னாள் சேர்மன் சதீஸ்குமார், பேராசிரியர் முனைவர் முத்தையா, முனைவர் ஜெய்குமார் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி விவேகானந்தரின் திருஉருவச் சிலையோடு,
ஆறு கல்வி நிறுவனங்களில் இருந்து ஏறத்தாழ 900 திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுவாமி விவேகானந்தரின் உபதேச மொழிகளைத் தாங்கிய பதாகைகளை எடுத்துக் கொண்டு அவற்றை கோஷமிட்டுக் கொண்டும் பக்தி பாடல்களை
பாடிக்கொண்டும் மெட்ரோ மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து அபிராமி திரையரங்கம் வரை பேரணியாக சென்றனர்.
பேரணியின் நிறைவில் காரமடை காவல் ஆய்வாளர் ஞானசேகரன் அவர்கள் மாணவர்களுக்கான உறுதிமொழியை வாசித்தார், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துறைத் தலைவர் முனைவர்.ஆர்.கிரிதரன் அவர்கள் நன்றி கூறினார்.நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஏறத்தாழ 2 கிலோ மீட்டர் தூரம் நடந்த இப்பேரணியில் பொதுமக்களும் கலந்து
கொண்டனர்.ஒரு வளமான சமுதாயத்தை உருவாக்க இந்தப் பேரணி ஒரு சிறு முயற்சியாக அமைந்தது.இந்தப் பேரணியில் யுனைடெட் கல்வி நிறுவனங்களில் இருந்து யுனைடெட் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், யுனைடெட் பார்மஸி கல்லூரி மாணவர்கள், காரமடை ஆர்.வி.கல்லூரி மாணவர்கள், வி.என். கிருஷ்ணசாமி நாயுடு கல்லூரி மாணவிகள் என மொத்தமாக 1000 இளைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய பேராசிரியர் முனைவர். ஜெய்குமார், முனைவர். சக்திவேல் ஒருங்கிணைத்தனர்.