February 3, 2025 தண்டோரா குழு
புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான தீர்வுகளின் மூலம் மீன்வளத் துறையில் உள்ள முக்கியமான சவால்களை நிவர்த்தி செய்வதற்காக அம்ருதா விஸ்வ வித்யாபீடம் தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்துடன் (TNJFU) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
TNJFU பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் என்.பெலிக்ஸ் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் TNJFU பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலுவலகத்தில் வைத்து கையெழுத்திடப்பட்டது.இந்த ஒத்துழைப்பானது செயற்கை நுண்ணறிவு (AI), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுகளில் அம்ருதாவின் நிபுணத்துவத்தை TNJFU பல்கலைக்கழகத்தின் மீன்வள அறிவியல் துறையுடன் ஒருங்கிணைக்கிறது.
மீன்வள மதிப்புச் சங்கிலி முழுவதும் செயல்திறன் மற்றும் மீள்தன்மையை மேம்படுத்த மீன் இருப்புகளை நிகழ்நேர கண்காணித்தல்,உகந்த மீன்வளர்ப்பு செயல்பாடுகள்,கழிவு குறைப்பு மற்றும் நிலையான கழிவு சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இந்த கூட்டாண்மை முக்கிய கவனம் செலுத்துகிறது.
அம்ருதாவின் குழுவில்,கல்வித்துறை & தொழில்துறை கூட்டாண்மைக்கான இயக்குநர் ஆர்.ரவிசங்கர் (ஓய்வு) அவர்கள், துணைப் பேராசிரியர் & தலைவர் டாக்டர் கே.வெங்கட சுப்பிரமணியன் மற்றும் உதவிப் பேராசிரியர் (ECE) டாக்டர் சி. கணேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் செரில் ஆண்டனி மற்றும் FCRI பொன்னேரியின் டீன் டாக்டர் ஜெயா ஷகிலா தலைமையிலான TNJFU உடனான கூட்டு முயற்சிகள் உடனடி கவனம் தேவைப்படும் முக்கிய பகுதிகளை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளன.
“சமூக நன்மை மற்றும் நிலைத்தன்மைக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த ஒத்துழைப்பு எடுத்துக்காட்டுகிறது,” என்று முதல்வர் ஆர். ரவிசங்கர் (ஓய்வு) கூறினார்.பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஆராய்ச்சிகளின் மூலம் நிலையான மற்றும் உலகளாவிய மேம்பட்ட மீன்வளத் துறையை இந்தக் கூட்டாண்மை உறுதிசெய்கிறது.