February 11, 2025 தண்டோரா குழு
சத்குரு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அசாம் மாநிலத்தின் தலைநகரான குவாஹத்திக்கு கடந்த சனிக்கிழமை (08/02/2025) அன்று சென்றார்.அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநரை சந்தித்த சத்குரு முதல்வர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், 51 சக்தி பீடங்களில் ஒன்றான காமக்யா கோவிலில் நேற்று (10/02/2025) தரிசனம் செய்தார்.
குவாஹத்தி ‘லோக் சேவா பவனில்’ சனிக்கிழமை அன்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அம்மாநில அரசின் மூத்த அதிகாரிகளுடன் சத்குரு கலந்துரையாடினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த அமர்வில், அதிகாரத்தில் இருப்பவர்களின் உள்நிலை வளர்ச்சியும் தனிப்பட்ட மாற்றமும் மாநில நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்துவதில் எவ்வாறு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சத்குரு விளக்கினார். மேலும் நல்லாட்சியை வளர்ப்பதில் ஆன்மிக விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் முதல்வருடன் அம்மாநில தலைமை செயலாளர் ரவி கோட்டா மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஹர்மீத் சிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதே போன்று வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் முதன்மை ஊடகங்களில் ஒன்றான பிரைடு ஈஸ்ட் நிறுவனம் (Pride East Entertainments) ஏற்பாடு செய்திருந்த ‘பிரைடு ஈஸ்ட் கான்க்ளேவ் 2025’ நிகழ்ச்சியிலும் சத்குரு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், சத்குரு நார்த் ஈஸ்ட் லைவ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் வாச்பீர் ஹுசைனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்ச்சியில், அசாம் மாநில ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, பிரைடு ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ரினிகி புயன் சர்மா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் குவாஹத்திக்கு அருகிலுள்ள அமிங்காவிலுள்ள வாண்ட்யா சர்வதேச பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (09/02/2025) அன்று “சத்குருவுடன் சத்சங்கம்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அசாம் மாநில முதல்வர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். மேலும் அம்மாநில அமைச்சர் ஜயந்த மல்லா பாருவா மற்றும் 10,000-க்கும் அதிகமான பொது மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்சியில், ‘சிவனுக்கும் அசாமிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா’ என்ற பங்கேற்பாளர் ஒருவரின் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கையில், “நாம் இருக்கும் இந்த நிலத்தில் சிவனின் ஆழமான இருப்பு இருக்கிறது. நீங்கள் ஒன்றை கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும், சிவன் ஞானத்தின் மூலத்தை வழங்கினார். அது 112 வழி முறைகளை கொண்டது. அதன் மூலம் நாம் லட்சக்கணக்கான வழிகளை முறைகளை உருவாக்கி கொள்ள முடியும். ஆகையால் உலகில் எந்த பகுதியானாலும் அங்கு நீங்கள் காணும் அனைத்தும் சிவன் அருளிய இந்த ஞானத்திலிருந்து தான் வந்துள்ளது. நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் ஏனென்றால் சிவன் நாம் இருக்கும் இந்த நிலத்தில் நடமாடி இருக்கலாம்” எனக் கூறினார்.