• Download mobile app
22 Feb 2025, SaturdayEdition - 3300
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா”! பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது

February 20, 2025 தண்டோரா குழு

கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் “தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா” எனும் பிரம்மாண்ட விழா பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெற இருக்கிறது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (20/02/2025) நடைபெற்றது. இதில் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா பங்கேற்று பேசினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் முத்தையா அவர்கள் பேசுகையில்,

“சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழ் மொழியின் செழுமையையும், தமிழ் மண்ணின் கலாச்சாரம், வீரம், கலைகள், வரலாறு, உணவு முறைகள், வாழ்வியல் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் கொண்டாடும் விதமாக ‘தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா’ கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு ‘தமிழ்த் தெம்பு திருவிழா’ மிகவும் பிரம்மாண்டமான முறையில் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆதியோகி முன்பு நடைபெற இருக்கிறது.

இத்திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட கைவினை, கைத்தறி, உணவு, விவசாய மற்றும் விளையாட்டு பொருட்களின் அரங்குகள் இடம்பெற உள்ளன. இதில் தமிழ் மொழியின் செழுமை, தமிழ் அரசர்களின் ஆளுமை, தமிழ் வளர்த்த அடியார்களின் பக்தி, காலத்தால் அழியாத தமிழரின் கட்டிடக்கலையின் நுட்பம், இயற்கையோடு இயைந்து வளர்ந்த சித்த மருத்துவம், அகிலமே பார்த்து வியக்கும் ஆலயங்கள் என தமிழரின் பெருமையை பறைசாற்றும் வகையிலான 24 கண்காட்சி அரங்குகளும் இடம்பெற உள்ளன.

நாட்டின மாடுகள் மற்றும் குதிரைகளின் கண்காட்சியும் இத்திருவிழாவில் நடைபெற உள்ளது. இதனுடன் தமிழகத்திலேயே முதன்முறையாக மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஆதியோகி முன்பு மார்ச் 7 முதல் 9 ஆம் தேதி வரை ‘நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தையும்’ நடைபெற உள்ளது.

நம் தமிழ் பண்பாட்டில் நிகழ்த்து கலைகள் என்பன எளிய மக்களுடைய உணர்ச்சிகளின் வடிகாலாக, வாழ்வியல் வரலாற்று பதிவுகளாக, உடல் மன ஒத்திசைவின் உச்சமாக வளர்ந்து வந்துள்ளன. இன்றைய காலத்தில் இந்த கலைகள் அனைத்தும் அழியும் அபாயத்தில் உள்ளது, ஆகையால் இந்த கலைகளையும், கலைஞர்களையும் வளர்த்து ஊக்குவிக்கும் விதமாக 11 நாட்களும் மாலை நேரங்களில் தமிழ் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக இதில் பறையாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரையாட்டம், வள்ளி கும்மி உட்பட பல நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

நம் தமிழ்நாட்டில் விளையும் பொருட்கள் முதல் தயாரிக்கப்படும் பொருட்கள் வரை பலவும் இந்த மண்ணுக்கே உரிய தனித்தன்மை கொண்டவைகளாகும். அந்த வகையில் தஞ்சாவூர் ஓவியம், வில்லியனூர் டெரகோட்டா, தோடா எம்பிராய்டரி, கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், மகாபலிபுரம் கற்சிலை, சுவாமிமலை ஐம்பொன் சிற்பங்கள் உள்ளிட்ட 20 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் இத்திருவிழாவில் இடம்பெற உள்ளது. இந்த கண்காட்சியுடன் கூடுதலாக பார்வையாளர்களுக்கு இந்த கலைகளின் எளிமையான ஒருநாள் செய்முறை பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழர் பண்பாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, கோலப் போட்டி, பறையிசைப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகள் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளன. இதில் பங்கேற்று வெற்றி பெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கபட உள்ளன.

தமிழர்கள் போர்க்களங்களில் பயன்படுத்தும் உத்திகள் மட்டுமல்ல ஆடுகளத்தில் ஆடும் விளையாட்டுகளும் வீரம் செறிந்தது தான், அந்த வகையில் கொங்குநாட்டு வீர விளையாட்டான ‘ரேக்ளா பந்தயம்’ மார்ச் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனுடன் பொது மக்களும், குழந்தைகளும் பங்கேற்று விளையாடி மகிழும் வகையில் கேளிக்கை விளையாட்டுகளும், மெகா இராட்டினங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.” என அவர் கூறினார்.

மேலும் படிக்க