January 27, 2017
தண்டோரா குழு
பஞ்சாபில் காங்கிரஸ் வேட்பாளரின் பாதுகாவலர் நாரீந்தர் சிங் மரணம் குறித்து புதுதில்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து புதுதில்லி காவல் துறை அதிகாரி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) கூறியதாவது:
“அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் குர்ஜித் சிங் ஆஜ்லாவின் பாதுகாவலர் நாரீந்தர் சிங். அவர் குண்டடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவத்தின்போது, குர்ஜித் சிங் அலுவலகத்தை விட்டு நாரீந்தர் வெளியே சென்றுள்ளார். திடீரென துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. நிர்வாகிகள் அங்கு சென்று பார்த்தபோது நாரீந்தர் சிங் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அவருடைய உடலைக் கைப்பற்றினர். அவர் தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் இறந்தாரா என்று விசாரணை மேற்கொண்டுள்ளோம்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக நாரீந்தர் சிங்கின் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. வேட்பாளர் ராஜீந்தர் மோகன் சிங் சின்னா வலியுறுத்தியுள்ளார்.