January 27, 2017 தண்டோரா குழு
கர்நாட மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள கம்பளா போட்டிக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அந்த மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் மக்களும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் எருதுகளைக் கொண்டு பாரம்பரியம் மிக்க கம்பளா விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு வந்தது.
காளைகளைக் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துவிட்டதால் இந்தப் போட்டியை நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக கர்நாடகத்தில் கம்பளா போட்டிகள் நடத்தப்படவில்லை.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தமிழக அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்ததைப் போல கர்நாடக மாநிலத்திலும் கம்பளா விளையாட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்க மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என கர்நாடக மக்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கம்பளா போட்டிக்குத் தடை வாங்கியது பீட்டா அமைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி, மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் “கம்பளா போட்டிக்கான தடையை நீக்க வேண்டும், பீட்டாவிற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
சில இடங்களில் எருமைகளுடன் வந்து போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். கம்பளா போட்டிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றால் தடையை மீறி கம்பளா போட்டி நடத்தப்படும் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும் , கம்பளா போட்டி நடத்துவதற்கு வழிசெய்யும் சட்டம் இயற்றுவது குறித்தும் அம்மாநில அரசு அரசியல் கட்சிகளுடன் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியது.
அதில் “சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற இருப்பதால் அவசரச் சட்டத்தைக் கொண்டு வர முடியாது. அதற்குப் பதிலாக கம்பளா போட்டிக்கு அனுமதி வழங்க தனியாக ஒரு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. கலாசார விளையாட்டுகளுக்குத் தடை விதிப்பது சரியல்ல” என்று அரசு கூறியுள்ளது.