April 4, 2025
தண்டோரா குழு
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய கோவை மண்டல அலுவலகத்தை வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஏ.மணிமேகலை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19 வது மண்டல அலுவலகம் தொழில் நகரமான கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட உள்ளது.இந்த புதிய மண்டல அலுவலகம் கோவை ராமநாதபுரம், சௌரிபாளையம் பிரிவு, கிருஷ்ணசாமி நகர் வேதவ் மெஜெஸ்டி முதல் தளத்தில் துவங்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று (ஏப்ரல் 4) நடைபெற்றது.யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் மணிமேகலை கலந்து கொண்டு புதிய மண்டல அலுவலகத்தை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வங்கியின் கோவை மண்டல தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார், சென்னை மண்டல தலைவர் சத்யபென் பெஹ்ரா,கோவை பிராந்திய அலுவலக துணைப் பொது மேலாளர் எஸ்.எஸ்.லாவண்யா மற்றும் துணைப் பொதுமேலாளர்கள், உதவி பொது மேலாளர்கள்,கிளை மேலாளர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஐந்து பிராந்தியங்களை ஒருங்கிணைக்கும் 280 கிளைகளை உள்ளடக்கியதாக கோவை மண்டல அலுவலம் செயல்பட உள்ளது.
கடந்த 1919 ஆம் ஆண்டு துவங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா தனிநபர் கடன், வீட்டுக் கடன், தொழில் கடன் என பல்வேறு புதிய சேவைத் திட்டங்களுடன் இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.