January 27, 2017 தண்டோரா குழு
மேகாலயா ஆளுநர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்து சண்முகநாதன் வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டுள்ளார்.
மேகாலயா ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். மேகாலயா ஆளுநர் மாளிகையில் நேர்முகத் தேர்வுக்கு வந்த இளம்பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகச் சர்ச்சை கிளம்பியது.
இதனை அடுத்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி அலுவலகங்களுக்கு முன்னாள் மேகலாயா ஆளுநர் சண்முகநாதன் மீது ஆளுநர் மாளிகை ஊழியர்கள் அடுக்கடுக்கான புகார்களை அனுப்பி வைத்தனர்.
இந்த புகார்களைத் தொடர்ந்து வியாழக்கிழமை சண்முகநாதன் தனது ராஜிநாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜிநாமாவைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டார்.
மேலும் மேகாலயா ஆளுநர் பொறுப்பை அசாம் ஆளுநர் பன்வாரிலால் கூடுதலாகக் கவனிப்பார் என குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.