January 28, 2017
தண்டோரா குழு
ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆகியவற்றுக்கான தேர்வுகளின் தேதிகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) மாற்றியுள்ளது.
இது குறித்து சி.பி.எஸ்.இ. அதிகாரி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை (ஜனவரி 28) கூறியதாவது:
10-ம்,12-ம் வகுப்புகளுக்கான தேர்வுத் தேதிகளின் மாற்றத்தின்படி, உடற்கல்வி தேர்வு ஏப்ரல் 1௦ம் தேதியிலிருந்து ஏப்ரல் 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பின் சமூகவியல் தேர்வு ஏப்ரல் 12-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 2௦-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நாடக ஆய்வுப் தேர்வு, தங்குல் மொழி ஆகிய இரண்டு பாடங்களும் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பதிலாக முன்கூட்டியே அதாவது ஏப்ரல் 10-ம் தேதிக்கும், உணவுச் சேவை ஏப்ரல் 29-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 26-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
10-ம் வகுப்பு மாணவர்களின் தமிழ்ப் பாடத் தேர்வு மார்ச் 18 நடைபெறும். குருங் தேர்வு மார்ச் 1௦-ம் தேதியிலும் என்சிசி தேர்வு மார்ச் 23-ம் தேதியும் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்ப் பாடத் தேர்வு மார்ச் 10, குருங் தேர்வு மார்ச் 23, மற்றும் தேசிய மாணவர் படை (என்சிசி) தேர்வு மார்ச் 15ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது.
நாடு முழுவதும் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 42௦ மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வையும், 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 மாணவர்கள் 10ம் தேர்வையும் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.