January 30, 2017 தண்டோரா குழு
நூலகத்திலிருந்து இரவல் வாங்கி, 43 ஆண்டுகளுக்குப் பிறகுத் திருப்பித் தரப்பட்டுள்ளது ஒரு புத்தகம். இந்த சுவையான சம்பவம் நடந்தது ஸ்காட்லாந்து நாட்டின் ஒர்க்னே நூலகத்தில் நடந்திருக்கிறது.
எட்வின் முயிர் என்ற உள்ளூர் எழுத்தாளர் – கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை பி.எச். பட்டர் என்பவர் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தை ஸ்காட்லாந்தில் ஒரு நூலகத்திலிருந்து நூலக உறுப்பினர் ஒருவர் 1973ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி எடுத்திருக்கிறார். ஆனால், அதைத் திருப்பித் தரவில்லை. அந்தப் புத்தகத்தையும் அவர் மறந்துவிட்டார்.
“ஒரு நாள் எங்கள் வீட்டைக் காலிசெய்யும் போது அந்தப் புத்தகம் கண்டெடுக்கப்பட்டது. நீண்டகாலமாக வைத்திருந்தோமே என்ற குற்ற உணர்ச்சியால் அதை திருப்பி தருவதுதான் சரியானது என்று அந்த நூலகத்திற்குப்புத்தகத்தை எடுத்துச் சென்று திருப்பி ஒப்படைத்தேன்” என்று நூலை இரவல் வாங்கியவர் தெரிவித்தார்.
புத்தகத்தைத் திருப்பித் தர வேண்டிய கெடு முடிந்து, மிக நீண்டகாலம் ஆகிவிட்டாலும் அதற்கு நூலகர் அபராதம் எதையும் விதிக்கவில்லை.
“எங்கள் நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகம் 43 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரமாக திரும்பி வந்துள்ளது. இரவல் புத்தகத்தைத் திருப்பி கொடுத்த பிறகு, ஏதோ பாரத்தை இறக்கியது போன்ற மகிழ்ச்சி அதை ஒப்படைத்தவரின் முகத்தில் காணப்பட்டது. எனவே, அபராதம் விதிக்கப்படவில்லை” என்று நூலகத்தின் மேலாளர், காரி அமோஸ் நிருபர்களிடம் கூறினார்.
“இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். மேலும், மீண்டும் புத்தக கணக்கில் சேர்ப்பதற்கு முன், அப்புத்தகத்தின் விவரங்கள் சரிபார்க்கப்படும்” என்றார் அவர்.
இதைப் போல் இங்கிலாந்தில் ஹீரேஃபோர்ட் கதேட்ரல் பள்ளி நூலகத்தில் இருந்து கடனாக வாங்கிய புத்தகம் 130 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்புக் கடிதத்தோடு கடந்த டிசம்பர் மாதம் திருப்பி அளிக்கப்பட்டது நினைவிருக்கும்.