January 30, 2017 தண்டோரா குழு
வங்கியில் நடப்புக் கணக்கில் உள்ள தொகையில் பணத்தை ஏடிஎம் இயந்திரம் மூலம் எடுப்பதற்கான கட்டுப்பாடு பிப்ரவரி 1ம் தேதி நீக்கப்படுகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மத்திய அரசு ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாதவை என்று கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்ததை அடுத்து, இந்தியாவில் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் சில கட்டுப்பாடுகள் விதித்தன. அதன்படி ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வரை எடுக்க முதலில் அனுமதிக்கப்பட்டது. அதன் பின் இது 4500 ஆக உயர்த்தப்பட்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 10 ஆயிரம் வரை எடுக்கலாம் என அறிவிக்கபட்டது. அதே நேரத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு வாரத்தில் அதிகபட்சமாக 25 ஆயிரம் ருபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை நீட்டித்தது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி, 1 முதல் ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு நீக்கப்படுகிறது. அதே நேரத்தில், வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கான கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அத்துடன் ஒவ்வொரு வங்கியும், தங்களுக்கான உச்ச வரம்புக் கட்டுப்பாட்டை அவர்களே விதித்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உடனடியாக விலக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.