January 31, 2017 தண்டோரா குழு
கிழக்கு தில்லியில் உள்ள ஷர்கர்பூர் என்னும் இடத்தில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து ரூ. 8.63 லட்சம் திருடப்பட்டது. இரு தினங்கள் முன் நடந்த இச்சம்பவம் தொடர்பாக ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை வைக்கும் எஸ்ஐஎஸ் ப்ரோசெகுர் நிறுவனத்தின் ஊழியரை புதுதில்லி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) கைது செய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது:
“இந்த திருட்டை குறித்து வெள்ளிக்கிழமை எங்களுக்கு தகவல் கிடைத்தது. எஸ்ஐஎஸ் ப்ரோசெகுர் நிறுவனத்தின் ஊழியர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை நிரப்பச் சென்றபோது பணப் பெட்டி வெளியே இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதை அந்நிறுவனத்தின் கணக்கரிடம் புகார் செய்துள்ளனர்.
விசாரணையின்போது, ஏ.டி.எம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. அந்த இயந்திரத்தின் உள்ளே உள்ள கேமராவைச் சோதனை செய்தபோது, புஷ்பேந்திர சிங் அந்த அறைக்குள் வந்து பணத்தைத் திருடியது பதிவாகியிருந்தது. உத்தர் பிரதேஷம் மாநிலத்தில் உள்ள கண்ணுஜ் மாவட்டத்தில் அவரைக் கைது செய்தோம்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், மாதம் 8000 சம்பளம் பெறுவதால் குடும்பத்தின் அடிப்படை தேவைகளை சந்திக்க முடியவில்லை என்று புஷ்பேந்திர சிங் கூறினார்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூத்த காவல் துறை அதிகாரி கூறுகையில், “எஸ்ஐஎஸ் ப்ரோசெகுர் நிறுவனத்தில் பாதுகாப்புப் பிரிவில் புஷ்பேந்திர சிங் பணியாற்றி வந்தார். புது தில்லியில் வெவ்வேறு வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் பல ஆயிரக்கணக்கான ரூபாயை வைத்துள்ளார். ஆனால், தனக்கு மாதம் 8,௦௦௦ ரூபாய்தான் வருமானம் வருகிறது என்று விரக்தி அடைந்தார். ஏ.டி.எம். இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என்று அவருக்குத் தெரியும். அதனால், அந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி இந்த திருட்டை செய்துள்ளார்” என்றார்.