February 1, 2017
தண்டோரா குழு
மத்திய பட்ஜெட்டானது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மக்களவையில் இந்த ஆண்டிற்கான பொது மற்றும் ரயில்வே பட்ஜெட் இணைந்தே செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது; “ மத்திய அரசின் இந்த பட்ஜெட் ஏழைகளின் கரத்தை வலுப்படுத்துவதற்காகஅர்பணிக்கப்பட்ட பட்ஜெட். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2.5 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளோடு இணைந்த இந்த பட்ஜெட்டானது இந்தியாவின் எதிர்காலத்தை வளப்படுத்தும் என நம்பிக்கை இருக்கிறது. பொது பட்ஜெட்டோடு ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்ததால் போக்குவரத்து துறை வளர்ச்சியடையும்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதும், மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே மத்திய அரசின் இலக்காகும்.2௦22-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பட்ஜெட்டில் அறிவித்தவாறு அனைவருக்கும் குறைந்த விலையில் வீடு கிடைப்பது சாத்தியமாகும்.
அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி திரட்டுவதில் நடைபெறும் ஊழலை தடுக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, மீன்வளம், தூய்மையான இந்தியா உள்ளிட்ட இலக்குகளை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது.
இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் நலனுக்கான திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்ஜெட்டானது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. ஊழல், கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் எதிரொலித்துள்ளது.”
இவ்வாறு மோடி கூறியுள்ளார்.