February 3, 2017 தண்டோரா குழு
சென்னை அருகே கடலில் விபத்தை ஏற்படுத்தி கடல் நீரை மாசுப்படுத்திய டான் காஞ்சிபுரம் கப்பல் மீது மீஞ்சூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, எண்ணூர் துறைமுகம் அருகே ஜனவரி 28-ம் தேதி இரு கடல் மைல் தொலைவில் இந்தியாவை சேர்ந்த டான் காஞ்சிபுரம் என்ற சரக்கு கப்பலும், இங்கிலாந்தை சேர்ந்த எம்.டி.பி.டபிள்யூ. மார்பிள் என்ற சரக்குக் கப்பலும் மோதிக்கொண்டன.
துறைமுகத்திற்குள்ளே டான் காஞ்சிபுரம் கப்பல் நுழைய முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தினால் டான் காஞ்சிபுரம் கப்பலில் ஏற்றி வரப்பட்ட கச்சா எண்ணெய் சிதறி, கடலில் கலந்தது. இதனால் 2௦ கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல் நீர் மாசடைந்து பல கடல் வாழ் உயிரினங்கள் பலியாயின. இதனையடுத்து கடலில் கலந்த கச்சா எண்ணெயைக் கரை ஒதுக்கி, அவற்றை அகற்றும் பணி 6 வது நாளாக வெள்ளிக்கிழமை தொடர்ந்து 6வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எண்ணூர் துறைமுகத்தின் பொதுமேலாளர் குப்தா அளித்த புகாரின் பேரில்,
டான் காஞ்சிபுரம் கப்பல் மீது மீஞ்சூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தை ஏற்படுத்தி, கடல் நீரை மாசுபடுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.