February 3, 2017 தண்டோரா குழு
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரது கால் எடுக்கப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி” என்று அப்பல்லோ மருத்துவமனைகளின் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி மறுத்தார்.
செய்தியாளர்களிடம் சென்னையில் அவர் வெள்ளிக்கிழமை பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இடையில் உடல்நலம் தேறி வந்ததாக மருத்துவமனை அறிவித்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் கடந்த டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
ஆனால், மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவிற்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடாமல் இருந்து வருகிறது. இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பாதாகவும் இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி, “ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் விளக்கம் அளிப்பதற்குத் தயார். அதே சமயம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைத்து விளக்கங்களும் ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டன” என்றார்.
அப்போது நிருபர்கள் அவரிடம், “ஜெயலலிதாவுக்கு கால் எடுக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறதே… அது உண்மையா?” என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த டாக்டர் ரெட்டி, “ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியே” என்று பதிலளித்தார்.