February 4, 2017 தண்டோரா குழு
ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிய முறைகேட்டில் ஈடுபட்டதாக வங்கி ஊழியர்கள் 156 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
இதுதொடர்பாக மக்களவையில், வெள்ளிக்கிழமை பேசிய அருண் ஜெட்லி, “பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் முறைகேடு செய்துள்ளதாக நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 156 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 41 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் மற்றும் சி.பி.ஐ., மூலம், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வங்கிகளும் அறிக்கை அளித்துள்ளன.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள், 11 பேரும் இந்த முறைகேடு புகார் காரணமாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வருங்காலத்தில் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது” என்றார்.