February 4, 2017 தண்டோரா குழு
திண்டுக்கல் அருகே உள்ள உலகம்பட்டி பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு ஜனவரி மாதமும் நடைபெறும் இந்நிகழ்ச்சி தடை காரணமாக கடந்த மூன்று வருடமாக நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியதையடுத்து அதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
கோவில் காளைகளுக்குப் பாரம்பரிய முறைப்படி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன. வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் பிடித்தனர். காளைகளைப் பிடித்த வீரர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.