February 6, 2017 தண்டோரா குழு
9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந. ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமலிங்க காலனி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரத் துறைத் திட்டம் மூலம் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.
முகாமில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
“தமிழகத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாமை பிப்ரவரி 6-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை நடத்த தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் 1987 மையங்கள் அமைத்து சுமார் 7.8லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிக்களுக்காக சுகாதாரத் துறையின் மூலம் 450-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத் துறையின் மூலம் 966 பணியாளர்கள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இணைந்து ஊரக வளர்ச்சித் துறை, மாவட்ட காவல் துறை, ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து முகாம்களில் செயல்பட்டு வருகின்றனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் இச்சிறப்பு முகாம் குறித்தும், தடுப்பூசியின் நன்மைகள் குறித்தும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள், ஒலிபெருக்கி, குறுந்தகடுகள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே போல் பள்ளிகளில் மாணவ மாணவியரிடமும் இதன் அவசியத்தைத் தெரிவித்து வீட்டில் உள்ள பெற்றோரிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது மட்டுமின்றி பள்ளிகளுக்கு வராத குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இதற்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருந்து மாவட்டத்தில் ஒரு குழந்தைகூட விடுபடாத வகையில் தடுப்பூசி போட்டு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும். 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்“
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எட்வின் ஜோ, துணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) பானுமதி, மாநகராட்சி மருத்துவ அலுவலர் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.