February 7, 2017 தண்டோரா குழு
இலங்கையின் நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 1௦ மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இது குறித்து மீன்வளத் துறை துணை இயக்குநர் கொளஞ்சிநாதன் கூறுகையில்,
“நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த 1௦ மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அதோடு அவர்களிடம் இருந்த மீன் வலைகள் மற்றும் உபகரணங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்தவர்கள். தற்போது அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்” என்றார்.
இதைப்போல் பிப்ரவரி 1ம் தேதி, இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இலங்கை கடற்படையினரால் மீனவர்களுக்கு நேரும் இந்த பிரச்சினையால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பிடிக்கப்பட்ட 25 மீனவர்கள் மற்றும் 119 படகுகளை இலங்கை காவலில் இருந்து விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிப்ரவரி 2ம் தேதி கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.