February 7, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தீவிர ஆலோசனை நடத்தி, மாநில நிர்வாகத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா நடத்தும் அரசியல் கேலிக்கூத்துகள், தமிழகத்தின் பெருமையையும், தமிழக மக்களின் புகழையும் உலக அளவில் கெடுக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன.
முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என சசிகலா துடிப்பதை அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும் விரும்பவில்லை. “விரும்பத்தகாத ஒரு சூழல் தங்கள் வீடு தேடி வருகிறதே. இதற்காகவா வாக்களித்தோம்” என தமிழக மக்கள் கோபத்தில் உள்ளனர்.
நிலையான ஆட்சியை ஓரே இரவில் “காபந்து சர்க்காராக” சசிகலா மாற்றியிருக்கின்றார். ஜெயலலிதாவின் மறைவைப் பயன்படுத்தி கொல்லைப்புறமாக முதலமைச்சர் பதவியில் அமர நினைக்கும் அவர் ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த மக்களுக்கு மன்னிக்கமுடியாத துரோகத்தை இழைத்திருக்கிறார்.
ஒரே இரவில் “மெஜாரிட்டி அரசின்” முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அவர்களை “காபந்து முதலமைச்சராக்கி” வினோதமான அரசியலை நடத்துகிறார் சசிகலா.
தமிழக மக்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குடிநீர்ப் பஞ்சம், 225க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை, காவிரிப் பிரச்சினை, “நீட்” தேர்வுப் பிரச்சினை என தமிழகம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் “காபந்து சர்க்கார்” தமிழகத்தில் இருப்பது மக்கள் நலனுக்கு விரோதமானது.
சசிகலாவின் இந்த அரசியல் அநாகரீக, அரசியல் சட்ட விரோத செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய சூழலில், ஆளுநர் அவர்கள் இது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி, மாநில நிர்வாகத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“.
இவ்வாறு ஸ்டாலின் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.