February 8, 2017 தண்டோரா குழு
“அ.தி.மு.க. கட்சிக்கு நான் என்றும் துரோகம் செய்ததில்லை. ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும்” என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது:
“அ.தி.மு.க. கட்சிக்கு நான் என்றும் துரோகம் செய்ததில்லை. ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும். அவரது மறைவு குறித்து விசாரணை கமிஷன் அமைப்பது மாநில அரசின் கடமை. பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.
பாரதிய ஜனதா கட்சி என்னை இயக்கவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்குக் காலம் உரிய பதிலைத் தரும். ஆளுநர் சென்னை வந்தவுடன் அவரைச் சந்திப்பேன்.
கட்டாயம் ஏற்பட்டால் ராஜினாமாவைத் திரும்பப் பெறுவேன். சட்டப் பேரவையில் என் பலத்தை உறுதியாக நிரூபிப்பேன். தமிழகம் முழுவதும் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்திக்க உள்ளேன்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற முறையில் தீபாவை மதிக்கிறேன். என்னுடன் இணைந்து செயல்பட தீபாவுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
இவ்வாறு ஓ.பி.எஸ். கூறினார்.