February 8, 2017 தண்டோரா குழு
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா துறைமுகத்திற்கு அருகில் உள்ள சாண்டிடவுன் பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 7) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 1,௦௦௦ வீடுகள் நாசமடைந்தன. 15,௦௦௦ பேர் தங்கள் வீடுகளை இழந்துவிட்டனர்.
இது குறித்து தீயணைப்புப் படை அதிகாரி எடில்பெர்டோ க்ருஸ் கூறியதாவது:
மணிலா துறைமுகத்திற்கு அருகில் சாண்டிடவுன் என்னும் இடம் உள்ளது. அதில் செவ்வாய் இரவு தீப்பற்றியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு படையினர் இரவு முழுவதும் போராடி புதன்கிழமை காலையில் தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் அங்கு வசித்து வந்த 15,௦௦௦ பேர் தங்கள் வீடுகளை இழந்துவிட்டனர்.
மற்றொரு இடமான பரோலா கம்பபவுண்டில், பல குடும்பங்கள் சந்துகளில் வீடுகாட்டி மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ்ந்து வந்தனர். அங்கும் தீ பரவியது. இதில் 1,௦௦௦ வீடுகள் நாசமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் நல அலுவலர் ரெஜினா ஜேன் மாடா கூறுகையில், “பாதிக்கப்பட்ட மக்களுக்காக மூன்று முகாம்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்த 3,௦௦௦ குடும்பங்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும், மக்கள் தங்கள் உடமைகள், ஆடைகள், சலவை இயந்திரம், மின்விசிறி ஆகியவற்றுடன் சாலைகளில் கூடியுள்ளனர். தீ விபத்தால் விநியோக லாரிகள் துறைமுகத்திலிருந்து வெளியே போகவோ உள்ளே வரவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.