February 9, 2017 தண்டோரா குழு
பழைய ரூபாய் 5௦௦,1௦௦௦ செல்லாது என அறிவித்தது உலக அளவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்று என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து மாநிலங்கவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி புதன்கிழமை பேசியதாவது;
“பழைய ரூபாய் 5௦௦,1௦௦௦ செல்லாது என அறிவித்தது உலக அளவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்று. ஊழலால் நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அதனால்தான் கறுப்புப் பணத்துக்கு எதிராகவும், நேர்மையற்றவர்களுக்கு எதிராகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விஷயத்தில் முதல் முறையாக மத்திய அரசும், இந்திய மக்களும் ஒரே மனநிலையில் இருந்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளில் சுமார் 35 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினார். பல்வேறு ஊழல்களுக்கு இடையே அவர் மட்டும் மெல்லிய அளவில் நேர்மையானவராக இருந்தார். அதே சமயம் அவர் தன்னை காத்துக் கொள்ளும் கலையில் கைதேர்ந்தவராகவும் திகழ்ந்தார்.
பழைய ரூபாய் 5௦௦,1௦௦௦ செல்லாது என்ற அறிவிப்பு கருப்புப் பணத்துக்கு எதிரான போராட்டம். இது அரசியல் கட்சிகளுக்கு எதிரானது அல்ல. எந்தவொரு கட்சியையும் ஒழிப்பதற்காக எடுக்கப்பட்டதில்லை. எனவே இதில் இறுதியான பலனை நேர்மையானவர்கள் பெறுவார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
கறுப்புப் பணம், பயங்கரவாதம், கள்ளநோட்டு ஆகியவை நமது அன்றாட வாழ்வில் ஊடுருவியது. இந்த நடவடிக்கையால் சமூகத்தில் நுழைந்த இந்தத் தவறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் முதலில் 700 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்தனர். அதன் பிறகு நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது“.
இவ்வாறு அவர் பேசினார்.