February 10, 2017 தண்டோரா குழு
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கோவை சங்கமேஸ்வரர் திருக்கோயில் தைப்பூச திருத்தேர் பவனி பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அருள்பெற்றனர்.
கோவை மாநகர மையமான டவுன் ஹால் பகுதியில் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் தேதியும் தைப்பூச திருநாளன்றும் திருத்தேர் பவனி நடைபெறும்.
தைப்பூச திருநாளை முன்னிட்டு அத்திருக்கோவிலிலிருந்து பவனி நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க பவனி தொடங்கியது.
தேர்ப்பவனி ஈஸ்வரன் கோவில் வீதி, கோட்டைமேடு, உக்கடம், என்.எச் சாலை வழியாக உலா வந்து, மீண்டும் திருக்கோவில் முன்பாக நிறைவடைந்தது.
சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் கோட்டைமேடு பகுதியில் தேர்ப் பவனி செல்வதற்கு அந்த சிறுபான்மை மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்த தேரோட்டம் கடந்த 5 ஆண்டுகளாகப் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி வெள்ளியன்று தேரோட்டம் நடைபெற்ற பாதையில் 360 டிகிரி கோணமுடைய கண்கானிப்பு கேமரா மூலம் நூற்றுக்கனக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.