February 11, 2017 தண்டோரா குழு
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலஅதிர்வினால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்,1௦௦க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் சனிக்கிழமை கூறுகையில்,
“ பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டனாவ் தீவில் வெள்ளிக்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 1௦௦க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலஅதிர்வினால் கட்டங்கள், விமான நிலையம் சேதமடைந்துள்ளன மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது” என்றார்.
“பிலிப்பைன்ஸ் சுரிகோ மாகணத்தின் கிழக்கு பகுதியை மையமாக கொண்டு இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுக் கோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது” என்று அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலஅதிர்வினால் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்படவில்லை என்று ஐக்கிய அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளி மண்டல பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 89 இடங்களில் நிலஅதிர்வுகள் உணரப்பட்டது. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலஅதிர்வின் காரணமாக இரவு தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியே வந்து பாதுகாப்பான இடங்களின் தங்கினர்.
“பசிபிக் ரிங் ஆப் பையர்” என்று அழைக்கப்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் தீவு அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலஅதிர்வு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.