February 11, 2017 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், செட்டிபாளையம் ஊராட்சி பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள், சோளம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
அப்போது விவசாயிகளுடன் அவர் பேசுகையில்
“ தங்கள் பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதன் விபரங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டதை அலுவலர்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதில் பெயர் திருத்தம், மற்ற பதிவுகள் விடுப்பட்டிருந்தால் அதை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும்.
பண ஒதுக்கீடு வந்த பின்னர் பெயர் மாற்றம் செய்ய இயலாது என்பதை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான தீவணம் மற்றும் வைக்கோல் வழங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. விரைவில் தீவனங்கள் வழங்கப்படும்.” என்றார்.
அதன் பின் கோவை மாவட்டம் ஓராட்டுக்குப்பை ஊராட்சி, கிணத்துக்கடவு வட்டம் அரசம்பாளையம் ஊராட்சி, பானப்பட்டி ஊராட்சி, அக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி பகுதிகளுக்குச் சென்று வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வின் போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் (பொறுப்பு) திரு.சுரேஷ், மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.