February 13, 2017
தண்டோரா குழு
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திங்கட்கிழமை தலைமைச் செயலகம் சென்றார். அங்கு அதிகாரிகளுடன் தமிழக அரசு நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்திருப்பதை முன்னிட்டு அங்கு காவல் துறையினரால் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டன.
முன்னதாக அவர், “நான் தலைமைச் செயலகம் சென்று வழக்கமான பணியில் ஈடுபடுவேன்” என்று கூறியிருந்தார். தொண்டர்களின் அணிவகுப்போடு தலைமைச் செயலகம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் தலைமைச் செயலகம் திங்கட்கிழமை வந்திருந்தார். ஆனால், அவர் முதலமைச்சர் வருகைக்கு முன்பே தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.