February 13, 2017 தண்டோரா குழு
பாகிஸ்தான் நாடு முழுவதும் காதலர் தினம் கொண்டாட இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. காதலர் தினம் இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு எதிரானது என்று தொடரப்பட்ட வழக்கில் மனுவை ஏற்றுக்கொண்டு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
காதல் தினம் கொண்டாடுவதை எதிர்த்து அப்துல் வாஹீத் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
“காதலர் தினம் தொடர்புடைய எந்த கொண்டாட்டமும் பொது இடங்களில் மற்றும் அலுவலங்களில் கொண்டாடத் தடை விதிக்கப்படுகிறது. மின்னணு மற்றும் அச்சு ஊடகம் இந்தக் கொண்டாட்டம் தொடர்பாக எந்த விளம்பரமும் தரக்கூடாது” என்று உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
இந்தத் தடை முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று பாகிஸ்தான் தகவல் அமைச்சகம், பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் (PEMRA), மற்றும் இஸ்லாமாபாத் தலைமை ஆணையர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
காதலர் தினம் பாகிஸ்தான் நாட்டின் கலாச்சாரத்துக்குத் தொடர்பில்லாதது. எனவே, அதைக் கொண்டாடுவதை நிறுத்த வேண்டும் என்று அதிபர் மம்னூன் ஹுசைன் கடந்த ஆண்டு நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
பாகிஸ்தான் நாட்டின் மத, தேசிய அடையாளத்தைப் பராமரிக்க வேண்டும் என்று மக்களை அவர் வலியுறுத்தினார் என்பது நினைவுகூரத் தக்கது.