February 14, 2017 தண்டோரா குழு
சசிகலாவுக்கு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், பிரமுகர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கை தொடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன்.அவர் கூறுகையில்,
“சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவின் முயற்சி தோல்வியடைந்தது. சசிகலாவும், மற்றவர்களும் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் 4 வருட சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால் எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது” என்றார்.
அதைப் போல் இந்த வழக்கை பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. கூறுகையில்,
“உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. குற்றவாளிகள் 3 பேரும் உடனடியாக சரணடைய வேண்டும். இந்த தீர்ப்பு நான் எதிர்பார்த்ததுதான்“ என்றார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜரான கர்நாடக மாநிலத்தின் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகையில்,
“சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நீதி வென்றுள்ளது. இனி அவர்கள் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இல்லை” என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்:
“பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை மற்றும் லஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது”
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்: “சொத்துக்குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பின் மூலம் சசிகலா முதல்வராகக் கூடிய பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியிருக்கிறது”
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்: ““ சட்டத்தின் பிடியில் இருந்து குற்றம் புரிந்தவர்கள் யாரும் தப்பிவிட முடியாது என்பதற்கான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இது ஒரு பாடமாகும்”.
நடிகை கவுதமி: “சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். அவர் ஜெயலலிதாவின் மறைவுக்கும் பதில் சொல்ல வேண்டும்”.