February 14, 2017 தண்டோரா குழு
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது. அதில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வெளியானது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து கர்நாடக அரசு, தி.மு.க. தரப்பில் க. அன்பழகன் மற்றும் பா.ஜ.க. மாநிலங்கவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெங்களூரு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி. குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் கர்நாடக நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். குற்றவாளிகள் அனைவரும் 4 வார காலத்துக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
பெங்களூரு நீதிமன்ற நீதிபதி குன்ஹா உத்தரவின்படி சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்ததும் நடைமுறைக்கு வந்தது.
ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரைச் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.